×

பழநியில் பக்தர்கள் வருகை குறைவால் விற்பனை சரிவு 20 டன் வாழைப்பழம் அழுகும் அவலம்: வியாபாரிகளுக்கு ரூ.40 லட்சம் நஷ்டம்

பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை குறைந்ததால் 20 டன் வாழைப்பழங்கள் விற்பனையாகாமல் அழுகும் சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது.பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா கடந்த 22ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது.  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் போன்றவை முறையே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடந்தது. இவ்விழாவிற்கு  வழக்கமாக 20 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் வருவர். கொரோனா காரணமாக தைப்பூச தேரோட்டத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லையென கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.  

இதன் காரணமாக இந்த வருடம் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது.தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர்  தாங்களாகவே பஞ்சாமிர்தம் தயாரித்து, முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் ஊர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு  பயன்படுத்தப்படும் வாழைப்பழங்களை விற்பனை செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தைப்பூச பக்தர்களை  எதிர்பார்த்து வியாபாரிகள் டன் கணக்கில் வாழைப்பழங்களை வாங்கி விற்பனைக்கு வைத்திருந்தனர். இந்நிலையில் பக்தர்கள் வருகை குறைந்திருந்ததால் வாழைப்பழ விற்பனையும் குறைந்தது.இதனால் விற்பனையாகாமல் சுமார் 20 டன் வாழைப்பழங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இவை தற்போது அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  வாழைப்பழ வியாபாரிகளுக்கு சுமார் ரூ.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி வேதனை அடைந்துள்ளனர்.



Tags : traders , 20 tonnes of bananas rotten: Rs 40 lakh loss to traders
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...