×

தடுப்பூசி போட்ட 2 மணி நேரத்தில் துப்புரவு தொழிலாளி மரணம் :குஜராத்தில் சோகம்; அதிகாரிகள் தீவிர விசாரணை

வதோதரா:குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 வயதுடைய துப்புரவு தொழிலாளி ஒருவர், தடுப்பூசி போட்ட இரண்டு மணி நேரத்திற்குள் இறந்தார். அதையடுத்து அவரது மரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும், அவரது திடீர் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இறந்த துப்புரவு தொழிலாளி ஜிக்னேஷ் சோலங்கி என்பவர் வதோதரா மாநகராட்சியில் (வி.எம்.சி) துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

அவருக்கு கடந்த 2016ம் ஆண்டு முதல் இதய நோய் இருந்துள்ளது. அவர் முறையாக மருந்துகள் எடுக்காததால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலை அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது வீட்டிற்கு சென்ற பின்னர் மயக்கம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு எஸ்.எஸ்.ஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இருந்தும் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர். இதுகுறித்து சோலங்கியின் மனைவி திவ்யா கூறுகையில், ‘என் கணவருக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து எனக்குத் தெரியாது. அவர், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு வீடு திரும்பினார். எங்களது மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. எதனால் மயக்கம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. தடுப்பூசி போட்டதால் இறந்தாரா? என்பதும் தெரியவில்லை’ என்றார்.

இதுகுறித்து எஸ்.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரஞ்சன் அய்யர் கூறுகையில், ‘சோலன்கிக்கு தடுப்பூசி போடுவதற்கு முந்தைய கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த காலகட்டத்தில், அவருக்கு எந்தவொரு பாதகமான பக்க விளைவுகளோ அறிகுறிகளோ இல்லை. மார்பு வலியால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே, அவர் இதய நோய் பாதிப்பின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம். இருந்தும் அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய, அவரது உடல் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அறிக்கைகள் வந்தபின் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

இதுகுறித்து மாநில சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் தேவேஷ் படேல் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அப்போதுதான் சோலங்கியின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய முடியும். வதோதராவில் மட்டும் இதுவரை 12,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை பக்க விளைவுகள் ஏற்பட்டதாக எந்தவொரு புகாரும் எவரும் தெரிவிக்கவில்லை’ என்றார்.



Tags : Cleaner ,Gujarat ,investigation , குஜராத்
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்