×

புதுச்சேரி வில்லியனூர் அருகே 4 மணி நேரம் தொடர் ஆன்லைன் விளையாட்டு!: பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட நேரமாக செல்போனில் விளையாடிய மாணவன் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். புதுச்சேரி அருகே மொபைல் போனில் 4 மணி நேரம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி அடுத்துள்ள வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது இளைய மகன் தர்ஷன் (16) தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் செல்போனில் ஃபயர்வால் என்ற ஆன்லைன் விளையாட்டினை தொடர்ந்து விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. காதில் ஹெட்செட்டை வைத்துக்கொண்டு அதிக சத்தத்துடன் விளையாடி கொண்டிருந்த தர்ஷன் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தர்ஷனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தர்ஷன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த மகனை கண்டு பெற்றோர் கதறி அழுத்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் வீட்டில் உள்ளனர்.

அவர்களின் பொழுதுபோக்கிற்காக டிவி, செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனை பெற்றோர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். விடுமுறை காலங்களில் பயனுள்ள வகுப்புகளை கற்று தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தாலும் பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் தான் செல்போனில் அதிக நேரம் ஆன்லைன் விளையாட்டினை விளையாடி மாணவன் தர்ஷன் உயிரிழந்துள்ளார். ஆன்லைன் விளையாட்டினை தடை செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : School student ,Pondicherry Villianur , Pondicherry, online game, schoolboy, kills
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி