×

“தியாகத்தின் மறு உருவம், எங்களின் ராஜமாதாவே ”: சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய 3 அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்

தேனி : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். விடுதலையாவதற்கு முன்பு சிறையிலிருந்த அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சசிகலாவை வரவேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினரும் போட்டி போட்டு கொண்டு போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டும் அதிமுகவினரை கட்சியிலிருந்து மேலிடம் அதிரடியாக நீக்கி வருகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அதிமுக ஒன்றிய  இளைஞரணி தலைவர் சின்னராஜா என்பவர், சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.  இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில், தமிழ் நாட்டை வழிநடத்த வருகைதரும் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளர், தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே வருக! வருக! ” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

அதே போல் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவுக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவரும், முன்னாள் தொகுதி செயலாருமான அரசங்குடி ந.சுவாமிநாதன் என்பவர் சசிகலாவை வரவேற்று திருவெறும்பூர் பகுதி உள்பட பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், அம்மா அவர்களின் அன்பு சகோதரி, தியாக தலைவி சின்னம்மா, கழகம் காத்திட, பொதுச்செயலாளர் பணியை தொடர்ந்திட வருக வருக என வரவேற்கிறேன், தியாக தலைவி சின்னம்மாவின் உண்மை விசுவாசி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

3 பேர் நீக்கம்

இந்த நிலையில், சசிகலாவிற்கு போஸ்டர் ஒட்டிய மேலும் 3 நிர்வாகிகளை அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக தனது அறிக்கையில், கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்

தேனி மாவட்டத்தை சார்ந்த பண்ணை சின்னராஜா (ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர்) , திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தை சார்ந்த அரசங்குடி சாமிநாதன் (திருவெறும்பூர் கிழக்கு ஒன்றியம்)( மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் துணைத்தலைவர்) , மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த குத்புதின் (செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி இரா.அண்ணாதுரை மற்றும்  திருநெல்வேலி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா ஆகிய இருவரையும் அதிமுக கட்சியிலிருந்து நீக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : queen mother ,AIADMK ,executives , Sasikala, AIADMK, Executives, Action, Dismissal
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...