×

ராணுவ ஆட்சி எதிரொலி!: மியான்மரில் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை..!!

வாஷிங்டன்: மியான்மர் நாட்டில் ஆட்சி அதிகாரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் அங்கு மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருக்கிறார். மியான்மரில் ஆளுங்கட்சியாக இருந்த தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங்சான் சூச்சி, அந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் எம்.பி.க்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆங்சான் சூச்சி உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

தொடர்ந்து, சட்டத்தின் ஆட்சி மீது தொடுக்கப்பட்ட நேரடி தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் எங்கெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகிறதோ அங்கெல்லாம் ஜனநாயகத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே ஏற்கனவே ராணுவ ஆட்சி இருந்த போது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலர் ஜென் சாக்சி தெரிவித்ததாவது, நீங்கள் அறிந்திருக்கிறபடி, நாங்கள் பொருளாதார தடைகளை நீக்கினோம்.

கடந்த ஆண்டுகளில் மியான்மர் ஜனநாயக பாதையில் சென்றதால் நாங்கள் அந்த தடையை நீக்கினோம். அத்தகைய முன்னோக்கி செல்லுதல் என்பது மீண்டும் தேவை என குறிப்பிட்டார். ஆனால் ராணுவத்தை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்க வேண்டும் என்று சூச்சியின் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இணையதளம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மியான்மரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.


Tags : Joe Biden ,Echo ,US ,Myanmar , Military rule, Myanmar, sanctions, Joe Biden
× RELATED அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை...