×

டிராக்டர் பேரணியின்போது நடந்த டெல்லி வன்முறைக்கு பிறகு பஞ்சாப் வாலிபர்கள் மாயம்: அமித்ஷாவிடம் எம்பி.க்கள் முறையீடு

புதுடெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைக்குப் பிறகு, பஞ்சாப்பை சேர்ந்த பல இளைஞர்கள் காணவில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை கண்டுபிடிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சரிடம்  பஞ்சாப் எம்பி.க்கள் கோரியுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். இதில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல்  ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக கலவரம் ஏற்பட்ட நிலையில் 300க்கும் மேற்பட்ட போலீசார், விவசாயிகள் பலரும் காயமடைந்தனர். டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானார். போராட்டம் நடந்த இடம் போர்களமானது. இதனை  தொடர்ந்து அங்கு தற்காலிகமாக இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் 3 பகுதிகளிலும் இன்டர்நெட் சேவையை நிறுத்தி நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 29ம் தேதி  இரவு 11 மணி முதல் 31ம் தேதி இரவு 11 மணி வரை இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மீண்டும் இன்டர்நெட் சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி இரவு 11 மணி முதல் இன்று இரவு 11 மணி வரை இன்டர்நெட் சேவை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லை பகுதிகள் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி  நடந்த டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. இதற்கு பிறகு பஞ்சாப்பை ேசர்ந்த பல இளைஞர்கள் காணாமல் போய் விட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்  ஷாவை  காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி மற்றும் பஞ்சாப் அமைச்சர்கள் சுக்ஜிந்தர் ரந்தாவா, சுக்பிந்தர் சிங் சர்காரியா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள். டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களை  டெல்லி போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு, அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர். இது குறித்து கவனத்தில் கொள்வதாக அமைச்சர் அமித் ஷா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிட்டர் கணக்குகள் நிறுத்திவைப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், போராட்டத்துடன் தொடர்புடையவர்களின் டிவிட்டர் கணக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்வோரை கொண்ட  கிசான்  ஏக்தா போர்சா மற்றும் பிகேயூ ஏக்தா உர்காகன் சங்கத்தின்  டிவிட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தனிநபர்கள், அமைப்புக்கள், ஊடக தளம் ஒன்றின்  டிவிட்டர் பக்கமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

Tags : teenagers ,Punjab ,violence ,tractor rally ,Delhi ,Amit Shah ,MPs , Punjab teenagers' magic after Delhi violence during tractor rally: MPs appeal to Amit Shah
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...