×

ஏரல் அருகே பைக்கில் ரோந்து சென்றபோது லோடு ஆட்டோவால் மோதி எஸ்.ஐ படுகொலை: ஓட்டலில் தகராறு கண்டித்ததால் வாலிபர் வெறிச்செயல்

ஏரல்: ஏரலில் ஓட்டலில் தகராறு செய்ததை கண்டித்ததால், பைக்கில் ரோந்து சென்ற எஸ்ஐ மீது லோடு ஆட்டோவால் மோதி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேடப்பட்ட வாலிபர் விளாத்திகுளம் கோர்ட்டில் சரணடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (55). இவர் ஏரல் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ஏரல் பஸ் நிலையம் அருகில் உள்ள பானிபூரி கடையில் ஒரு வாலிபர் சிக்கன் ரைஸ் வேண்டும் என தகராறு செய்வதாக தகவல் கிடைத்து எஸ்.ஐ பாலு மற்றும் போலீசார் சென்று விசாரித்தனர். இதில் அவர் தீப்பாச்சி கிராமத்தை சேர்ந்த முருகவேல் (40) என்பதும், மெக்கானிக்கான அவர், கொற்கை விலக்கு அருகில் வாழவல்லான் வடக்கு மெயின்ரோட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ பாலு, முருகவேலை கண்டித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்.

இந்நிலையில் இரவு 10 மணி அளவில் ஏரல் பஸ் நிலையத்தில் உள்ள மற்றொரு ஓட்டலில் முருகவேல் மீண்டும் தகராறு செய்தார். தகவலறிந்ததும் எஸ்.ஐ பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி, லோடு ஆட்டோவுடன் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து எச்சரித்தனர். பின்னர்லோடு ஆட்டோவை மட்டும் பறித்துகொண்டு போதையில் இருந்த முருகவேலுவை காலையில் வருமாறு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இரவு 1 மணி அளவில் எஸ்.ஐ பாலு, ஏட்டு பொன் சுப்பையா இருவரும் பைக்கில் ரோந்து சென்றனர். அப்போது கொற்கை விலக்கு ரோட்டில் வீட்டு உரிமையாளர் குமரேசனின் லோடு ஆட்டோவுடன் முருகவேல் நின்றிருந்தார். இதைபார்த்த எஸ்.ஐ பாலு அவரிடம் விசாரித்து, காலையில் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறி சென்றுள்ளார்.

தன்னை பலர் முன்னிலையில் 2 முறை எஸ்ஐ பாலு அவமானப்படுத்தி விட்டாரே என கடும் ஆத்திரத்துடன் இருந்த முருகவேல், அவர்களை பின் தொடர்ந்து லோடு ஆட்டோவை ஓட்டிச் சென்று கொற்கை விலக்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் பைக் மீது பயங்கரமாக மோதிவிட்டு தப்பினார். இதில் எஸ்ஐ பாலுவும், பைக்கை ஓட்டி வந்த ஏட்டு பொன் சுப்பையாவும் கீழே விழுந்தனர். மயங்கி கிடந்த எஸ்ஐ பாலுவை ஏட்டு மீட்டு ஏரல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காலில் லேசான காயம் அடைந்த ஏட்டு பொன்சுப்பையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.   

ஆட்டோவை ஏற்றி எஸ்ஐயை படுகொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்ேடார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில் விளாத்திகுளம் குற்றவியல் கோர்ட்டில் முருகவேல் நேற்று காலை 11 மணிக்கு சரண் அடைந்தார். அவரை பிப்.5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சரவணகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். லோடு ஆட்டோ மோதி படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பாலுக்கு மனைவி பேச்சியம்மாள் (50), மகள் ஜெயதுர்கா வேணி (25)  ஆகியோர் உள்ளனர்.

எஸ்ஐ குடும்பத்துக்கு 50 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், லோடு ஆட்டோ மோதி கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ.பாலுவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு சிறப்பினமாக, ரூ.50 லட்சமும், காயமடைந்த காவலர் பொன்சுப்பையாவுக்கு ரூ.2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags : SI ,collision ,hotel dispute , Earl, S.I., Massacre
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...