×

ஆளும்கட்சிக்கு ஆதரவு தகவல்களை சேகரிப்பதில் உளவுத்துறை ஐஜியுடன் மோதும் முன்னாள் ஐஜி: வெளிநபருடன் தகவல்களை பரிமாறக்கூடாது என்ற உத்தரவால் காவல்துறையில் பரபரப்பு

சென்னை: தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக இருப்பவர் ஈஸ்வரமூர்த்தி. சட்டம் ஒழுங்கு பிரச்னை, ரவுடிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் பற்றி பல உளவுத்தகவல்களை சேகரித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கு வழங்குவார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் உளவுத்துறையில் நியமிக்கப்பட்டு வந்ததால், ஆளும் கட்சிக்கு வேண்டிய தகவல்களை சேகரித்து கொடுப்பது, எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கிய பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய விஐபிக்களின் செல்போன்களை டேப் செய்து, தகவல்களை எடுப்பது, எதிர்க்கட்சிகளை பிரிப்பது, எதிர்க்கட்சியை உடைப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இதனால் இந்த துறையை கேட்டுத்தான் ஆளும் கட்சி தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

இந்தநிலையில், உளவுத்துறையில் பணியாற்றும் ஒரு போலீஸ் அதிகாரியிடம் முன்னாள் உளவுத்துறை ஐஜி ஒருவர் போன் செய்து பேசியுள்ளார். தான் சில வேட்பாளர்களின் பட்டியலை அனுப்புவதாகவும், அந்தப் பட்டியலில் உள்ளவர்களைத்தான் வேட்பாளர்களாக போட உள்ளோம். அவர்கள் குறித்து விசாரித்து எனக்கு அறிக்கையாக கொடுங்கள் என்று பேசியுள்ளார். ஏற்கனவே உளவுத்துறை ஐஜியாக இருந்தவரிடம், தற்போது பணியாற்றும் அதிகாரி வேலை செய்துள்ளார். அந்த உரிமையில் போன் செய்து கேட்டுள்ளார். ஆனால், தற்போது பணியாற்றும் அதிகாரி பயத்தில், இந்த தகவலை தற்போது உளவுத்துறை ஐஜியாக உள்ள ஈஸ்வரமூர்த்தியிடம் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி, இந்த தகவலை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள திரிபாதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் இருவரும் ஆலோசனை நடத்திய பிறகு உளவுத்துறையின் அவசரக் கூட்டத்தை ஈஸ்வரமூர்த்தி கூட்டியுள்ளார். அந்தக் கூட்டத்தில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மட்டுமல்லாது, தற்போது வேறு பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரி போன் செய்து தகவல்கள் கேட்டால் கூட கொடுக்கக் கூடாது. அப்படி யாராவது பேசினால் அந்த தகவலை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதையும் மீறி யாராவது உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக தகவல் தெரிந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது குறித்து விசாரித்தபோது, ‘தற்போது பணியாற்றும் உளவுத்துறை அதிகாரியிடம் பேசியது முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி என்று கூறப்படுகிறது. அவர், தற்போது தனியாக அலுவலகம் அமைத்து ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

உளவுத்துறை அதிகாரிகள் என்ன வேலை செய்கிறார்களோ, அதே வேலைகளை ஆளும் கட்சிக்காக தனியாக இவர் செய்து வருகிறார். மேலும், தற்போது போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம் குறித்த பட்டியல்களை டிஜிபி திரிபாதி தயாரித்து முதல்வர் அலுவலகத்தில் கொடுத்தாலும், அந்தப் பட்டியல் நேரடியாக சத்தியமூர்த்திக்கு அனுப்பப்பட்டு அவர் சில மாற்றங்களை செய்துதான் பட்டியலை அனுப்புவாராம். அந்தப் பட்டியல்தான் வெளியாகுமாம்.

இதனால் அதிகாரிகள் மாறுதல் உத்தரவு வெளியானவுடன் பட்டியலை பார்த்தால் டிஜிபி அனுப்பிய பட்டியல் பெரும்பாலும் மாற்றப்பட்டிருக்குமாம். இதனால் கடந்த சில மாதங்களாக தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் பணிகளில் சத்தியமூர்த்தி குறுக்கிடுவதாக இருவரும் கருதி வந்தனர். இதனால், தற்போது அவர்தான் உளவுத்துற அதிகாரிகளை ஓய்வு பெற்ற பின்னரும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Tags : IG ,outsiders , Ruling party, support, intelligence, agitation
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு