நீலாங்கரை அருகே ருசிகரம்: ஆழ்கடலில் ஐடி ஊழியர்கள் திருமணம்: 60 அடி ஆழத்தில் மணமேடை: 4 நாட்களாக நீச்சல் பயிற்சி பெற்றனர்

சென்னை: நீலாங்கரை அருகே ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் ஐடி ஊழியர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பி.இ., பட்டதாரி சின்னதுரை (29), கோயம்புத்தூரை சேர்ந்த பி.டெக்., பட்டதாரி ஸ்வேதா (26). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் திருமண ஏற்பாடு, இருவீட்டார் தலைமையில் நடைபெற்று வந்தது. தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் நடத்த விரும்பிய சின்னதுரை, இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளராக உள்ள தனது உறவினர் புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தனிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அவர், மணமக்கள் இருவருக்கும் நீலாங்கரை கடற்பகுதியில் 4 நாட்கள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்தார்.

இதை தொடர்ந்து, நேற்று சென்னை நீலாங்கரை கடற்பகுதியில், இந்த ஜோடி இந்து முறைப்படி உடை அணிந்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடலுக்குள் படகில் சென்றனர். முன்னதாக, 60 அடி ஆழத்தில் இருக்கும் செடிகள் மற்றும் பூக்களைக் கொண்டு மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. கடலில் நீந்தியபடியே, மணமக்கள் இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர். அதை தொடர்ந்து மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். இந்த புதுமையான திருமணம் குறித்து அரவிந்தனிடம் கேட்டபோது, ‘‘இதற்கு முன்பு கேரளாவில் இதுபோன்று திருமணம் ஒன்று கடலில் 18 அடி ஆழத்தில் நடைபெற்றுள்ளது. அதை மிஞ்சும் வகையில், 60 அடி ஆழத்தில் இந்த திருமணம் நடைபெற்றது, என்றார்.

Related Stories:

More
>