×

கீழமை நீதிமன்றங்கள் வரும் 8ம் தேதி முதல் செயல்படும்: ஐகோர்ட் தலைமை பதிவாளர் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதையடுத்து உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்குகள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. மாவட்ட நீதிமன்றங்களில் குறிப்பிட்ட வழக்குகள் மட்டும் நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்ந்து தளர்த்தப்பட்டதால் ஒரு சில வழக்குகள் மட்டுமே நேரடி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதையடுத்து உயர் நீதிமன்றத்தில் முழு அளவில்  நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என்று பார்கவுன்சில் மற்றும் வக்கீல்கள் சங்கங்கள் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் வரும் 8ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் செயல்படும் என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவதும் கடைபிடிக்கப்பட வேண்டும், முக கவசம் இல்லாதவர்களை நீதிமன்றங்களுக்குள் அனுமதிக்க கூடாது. வக்கீல்கள் அறை, நூலகங்கள், உணவகம் திறப்பு குறித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 10 மாதங்களுக்கு பிறகு கீழமை நீதிமன்றங்கள் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது வக்கீல்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : courts ,Chief Registrar ,ICC , Lower Courts, ICC, Order
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...