×

தெரு பெயர் பலகை மீது போஸ்டர் ஒட்டும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் உள்ள தெருக்களின் பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டும் அரசியல் கட்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில்   மியாவாக்கி காடுகள் (அடர்வனம்) அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூங்கா துறை தலைமை  பொறியாளர் காளிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 1000 இடங்களில் மியாவாக்கி காடுகள் அமைக்க வேண்டும் என்பது மாநகராட்சியின் திட்டம். விரைவில்  இது சாத்தியமாகும். இந்த காடுகளை சுற்றி வசிக்கும் மக்களுக்கு இது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும், காற்று மாசு குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதோடு, பறவைகள், சிறிய பூச்சி இனங்களின் வசிப்பிடமாகவும் இந்த காடுகள்  உள்ளது.

தற்போது வரை சென்னையில் 30 இடங்களில் மியாவாக்கி காடுகள் அமைக்கப்பட்டு, 60ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. கோட்டூர்புரத்தில் 2,160 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரங்களின் வளர்ச்சி நன்றாக உள்ளது. அருகில் இருக்கும்  மக்களின் மருத்துவ வசதிக்கும் சில மூலிகைகள் பயன்படுகிறது.  படிப்படியாக இந்த காடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். காலி இடம் வைத்திருப்பவர்கள், இது போன்ற குறுங்காடுகளை உருவாக்க எண்ணம் உள்ளவர்கள் மாநகராட்சியிடம்  தெரிவித்தால் அவர்களுக்கு உடனடியாக ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டூர்புரம் மியாவாக்கி காடுகளுக்காக இதுவரை ரூ.15 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு இடத்திற்கும் இந்த செலவு மாறுபடுகிறது.

குறைந்த செலவில்  இந்த காடுகள் உருவாக்கப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு பின் பொதுமக்கள் உபயோகத்திற்கு இவை திறக்கப்படும்.  நம்ம சென்னை சிற்பம் நம்முடைய பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகதான் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 60 ஆயிரம் தெருக்களின் பெயர் பலகைகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பலகைகள் மீது போஸ்டர் ஒட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் சமயத்தில்  கட்சியினர் ஒட்டினால் அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : parties ,Corporation Commissioner , Action on political parties sticking posters on street name board: Corporation Commissioner warns
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...