×

மத்திய பட்ஜெட் தாக்கல் வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை: எல்ஐசி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை

* பெட்ரோல், டீசலுக்கு வரி
* தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு
* செல்போன் உதிரிபாகங்களுக்கு வரி விதிப்பு
* பழைய வாகனங்களை அழிக்க புதிய திட்டம்
* 100 நாள் வேலை திட்ட நிதி குறைப்பு    
* 8 வழிச்சாலை பணி இந்த ஆண்டு துவக்கம்  
* நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாதது சம்பளதாரர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்ஐசி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, 8 வழிச்சாலை திட்டம் தொடங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி, செல்போன் உதிரிபாகங்களுக்கு வரி விதிப்பு போன்றவற்றால் அவைகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைப்பு, பழைய வாகனங்கள் அழிக்க புதிய திட்டம் போன்ற அறிவிப்புகள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிலையில், வரும் 2021-22ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் இது.

பட்ஜெட் தாக்கலுக்கான சம்பிரதாய நடவடிக்கைகள் காலை10 மணிக்கு  தொடங்கின. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் அனுமதி பெற்ற பிறகு, மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியாக காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக வழக்கமான காகித கோப்பு இல்லாமல், டிஜிட்டல் முறையில் டேப்லெட்டுடன் பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசித்தார்.

இந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டது நடுத்தர மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. சுகாதாரத்துறை மற்றும் உட்கட்டமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையிலும், பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, எல்ஐசி, பாரத் பெட்ரோலியம் பங்குகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடுமையாக எதிர்க்கப்படும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை இந்த ஆண்டில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

பழைய வாகனங்களை அழிக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பெரிய அளவில் சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் வேளாண் செஸ் என்ற பெயரில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வரும் 6 ஆண்டுகளில் 64,180 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுளளது.
* சுகாதாரத் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக ரூ.2 லட்சத்து 23,846 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நீர்நிலைகளை பராமரிக்கக் கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கீடு
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் ஒரு கோடி பேருக்கு சமையல் காஸ் இணைப்புகள் தரப்படும்.
*  டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* நாடு முழுவதும் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* மின்உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடியில் புதிய திட்டம்.
*  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 118 கி.மீ தூர இரண்டாம் கட்ட பணிகள் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.63,246 கோடி நிதி.
* சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1 லட்சத்து 18,101 கோடி ஒதுக்கீடு.
* தமிழகத்தில் ரூ.1.3 லட்சம் கோடி செலவில் 3,500 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
* மார்ச் 2022க்குள் 11 ஆயிரம் கிமீ தூரத்துக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
*  பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம்.
*  குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது.
* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
*  மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்னையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.
* பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.
* பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு
* உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு
* அடுத்த மூன்றாண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் திறக்கப்படும்.
* வங்கிகள் மறு சீரமைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஐடிபிஐ வங்கி தவிர, மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்.
* காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிப்பு.
* எல்ஐசி நிறுவன பங்குகள் 2022ல் விற்கப்படும்.
* சென்னை உட்பட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.
* தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும்.
*  நடைபாதை வியாபாரிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டம்.
* பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் விற்பனை மூலம் ரூ. 1.75 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயம்.
* பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகள் 2021-22ல் விற்கப்படும்.
* குறைந்த விலை வீடு கட்டும் திட்டத்துக்கு மேலும் ஓராண்டுக்கு வரிச் சலுகை.
* வீட்டு கடன் வட்டிக்கான வருமான வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.
* மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில உதிரி பாகங்களுக்கான சுங்க வரி உயர்வு.
* தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி குறைப்பு.
* தனிநபர் வாகனம் 20 ஆண்டுக்கு பின் தகுதிச் சோதனை செய்ய வேண்டும். 20 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை அழிப்பதற்கான தன்னார்வ திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொது வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு பின் தர சோதனை செய்ய வேண்டும்.
* 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ரூ.73,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.1.15 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

4,378 நகரங்களுக்கு குடிநீர் வசதி

நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய 2.87 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் தண்ணீர் வசதி வழங்குவதற்காக ஜல்சக்தி துறையின் கீழ் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புறங்களிலுள்ள வீடுகளுக்கும் பைப்லைன் வழியாக தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ₹2.87 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

75 வயது மேற்பட்ட முதியோருக்கு விலக்கு

தனிநபர் வருமான வரியில் மாற்றங்களை செய்யாத மத்திய அரசு, முதியோர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர்களும், வங்கிகளில் போடப்பட்டுள்ள  வட்டியை மட்டுமே நம்பியிருக்கும் முதியவர்களுக்கு இது நிம்மதி அளிக்கும் என்றும் தனது உரையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அதே நேரம், வங்கிகளில் இவர்கள் செய்துள்ள டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டிக்கான வழக்கமான வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : companies ,Bharat Petroleum ,LIC , Federal Budget, Filing, Public Sector, Sales
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...