×

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: சிபிஐ முன்னாள் எஸ்பியிடம் சிபிசிஐடி அதிரடி விசாரணை: பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: சென்னை என்ஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சிபிஐ கைப்பற்றிய தங்கத்தில், 103 கிலோ மாயமான வழக்கில், சிபிஐ முன்னாள் எஸ்பி வெள்ளைச்சாமியிடம் சிபிசிஐடி போலீசார் குற்றாலத்தில்  நேற்று அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது, சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கைப்பற்றியது 400 கிலோ தங்கம் தான் என்று அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன்  வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து தென் மண்டல சிபிஐ இணை இயக்குநராக இருந்த அசோக்குமார், டிஐஜி அருணாச்சலம், எஸ்பி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர்  தலைமையிலான அதிகாரிகள் சுரானா கார்ப்பரேஷனில் 2012 ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, சுரானா நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்திற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும்  ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது. பின்னர்  லாக்கர்களின் 72 சாவிகளும் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததாக தயாரிக்கப்பட்ட ஆவணம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் அளித்தனர்.இதற்கிடையே சுரானா நிறுவனம் தொழில் வளர்ச்சிக்காக எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல்  வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்ட்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் கடனாக வாங்கிய ரூ.1,160 கோடியை திரும்ப செலுத்தாமல் இருந்தது.

பின்னர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து வங்கிகளின் கடன்களை அடைக்க உத்தரவிட்டது. அதன்படி சீல் வைக்கப்பட்ட சுரானா நிறுவனத்தின்  லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை மாயமாகி இருந்தது. இதையடுத்து, சிபிஐ வசமிருந்து மாயமான 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி  ராமசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.என்.பிரகாஷ் மாயமான 103 கிலோ தங்கம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார்,டிஎஸ்பிக்கள் சரவணன், அனில்குமார் தலைமையில் தனிப்படையினர் குற்றாலம் சென்றனர். பின்னர் அங்கிருந்த சிபிஐ எஸ்பி வெள்ளைச்சாமியிடம் 3.30 மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்போது  அவர் போலீசாரிடம் கூறியதாவது, நாங்கள் சுரானா கார்ப்பரேஷனில் இருந்து 400 தங்கத்தை வங்கிகள் மற்றும் சாட்சிகள் முன்புதான் பறிமுதல் செய்தோம். அதை எடைப்போட்டு, சுரோனாவின் லாக்கரிலேயே பாதுகாப்பாக வைத்தோம். அதை  சீல் வைத்தோம் என்று ஒரு எஸ்பியே போலீசாரிடம் ஒத்துக் கொண்டார். இதனால இப்போது சிபிஐ அதிகாரிகள் எடை மிஷனின் தவறு என்று கூறியது தவறு என்பது தெரியவந்துள்ளது.



Tags : CBI ex-SP CBCID , 103 kg gold magic case: CBI CBI probe into ex-SP: sensational confession
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...