×

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஒரு மாய லாலிபாப் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது: மத்திய பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: “தமிழ்நாட்டில் 1.03 லட்சம் கோடியில் 3500 கிலோ மீட்டர் சாலைகள்” என்று கூறப்பட்டிருந்தாலும்-நிதி ஒதுக்கப்பட்டு விடவில்லை. 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கான  இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு 63,426 கோடி ரூபாய். இத்திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் 21.11.2020 அன்றே வந்து அடிக்கல் நாட்டி விட்டுச் சென்று விட்டார்.  எனவே “தமிழகத்திற்கு மெகா  திட்டங்கள்” என்ற இரு திட்டங்களுமே இந்த அளவில் தான் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மக்கள் விரும்பாத- விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கின்ற-“சென்னை-சேலம்” பசுமை வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம்  என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்திருப்பது, தேர்தல் ஆண்டில் கூட-தமிழக விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராகவே நடப்போம் என்ற மத்திய பாஜக அரசின் பிடிவாதமான, முதலாளிகளுக்குச் சாதகமான, மனநிலையைப் பிரதிபலிக்கிறது;

இது பழனிசாமிக்கு மட்டும் வேண்டுமானால் பரவசத்தைத் தரலாம். வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக பெட்ரோல், டீசலுக்கு புதிதாக செஸ் வரி விதிக்கப்பட்டிருப்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  தமிழ் மொழி வளர்ச்சி  புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனாவிற்கு முன்னும்-பின்னும் மத்திய பாஜக அரசு மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்  வகையிலும்-மாநிலங்களில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை மேலும் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த பட்ஜெட், சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு “மாய லாலிபாப்” கொடுத்திருக்கிறதே தவிர - அந்த  “லாலிபாப்” உண்மையானது அல்ல, கைவரக் கூடியதல்ல என்பதை நிதி நிலை அறிக்கையின் வாசகங்கள் நிரூபிக்கின்றன.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
1.75 லட்சம் கோடி நிதி திரட்ட பொதுத்துறைகள் பங்கு விற்பனை
* ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கம்பெனி லிமிடெட் (பிபிசிஎல்), ஷிப்பிங் கார்பரேஷன், கண்டெய்னர் கார்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் 2021-22ம் நிதியாண்டில் முடிக்கப்பட உள்ளது.
* 2 பொதுத்துறை வங்கிகள், பொது காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பது தொடர்பான திருத்தங்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
* மத்திய அரசின் எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பது குறித்த பட்டியலை தயாரிக்கும்படி நிதி ஆயோக் அமைப்பு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
*வரும் ஏப்ரல் 1ம் தேதி அன்று தொடங்க இருக்கும் நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையின் மூலம்  1.75 லட்சம் கோடி வருவாய் திரட்டப்பட உள்ளது.
* இதர துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்த புதிய பங்கு விற்பனைக்கான கொள்கைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

வாக்கு இயந்திரம் வாங்க 1005 கோடி
தேர்தல் கமிஷன் புதிதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க 1,005 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்காக 7.20 கோடியும், பிற தேர்தல் செலவுகளுக்கு 57.10  கோடியும், கட்டுமான பணிகளுக்கு 249.16 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்வெளித்துறைக்கு 4,000 கோடி கூடுதல் நிதி
விண்வெளி துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 4,449 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூலதன செலவீட்டு தொகையாக 8,228 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டுக்கு 13,949 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Central Government ,run ,Tamil Nadu ,MK Stalin ,elections ,Assembly , Central government is giving a magic lollipop to the people of Tamil Nadu in the run up to the Assembly elections: MK Stalin's criticism of the Union Budget
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...