×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 2ம் தேதி (நாளை) காலை  11 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்றைய தினம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார். கவர்னர் ஆங்கிலத்தில் படித்த உரையை சபாநாயகர் தனபால் தமிழில் வாசிப்பார். இதையடுத்து,  அன்றைய தின கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து  கொள்வார்கள். அப்போது, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். அதன்படி, வருகிற 5ம் தேதி வரை (வெள்ளி) சட்டப்பேரவை கூட்டம் நடைபெறலாம் என்று  கூறப்படுகிறது.

தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வர உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் பல்வேறு பிரச்னைகள் குறித்து  விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த மசோதாவுக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால்,  இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கப்படும்.

அதேபோன்று, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி மற்றும் சமீபத்தில் பெய்துள்ள மழையால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்  வழங்குவது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை, செவிலியர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சட்டப்பேரவையில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் நடைபெற உள்ள  சட்டப்பேரவை கூட்டம் என்பதால் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும், சட்டப்பேரவை கூட்டம்  நடைபெறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து அதற்காக சான்றிதழுடன் தான் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அனைத்து எம்எல்ஏக்கள், கூட்டத்தொடரில்  பங்கேற்க உள்ள  பத்திரிகையாளர்கள், சட்டப்பேரவை செயலக ஊழியர்கள்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. மேலும், இந்த கூட்டத்தொடரை  தொடர்ந்து இன்னும் ஒரு சில வாரங்களில் 2021ம்  ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.



Tags : Tamil Nadu Legislative Assembly ,Banwarilal ,gathering , The Tamil Nadu Legislative Assembly convenes tomorrow amid a tense political situation: Governor Banwarilal addresses the gathering
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...