×

சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றிப்பெறும் என்பதால் தமிழகத்திற்கு அதிக சலுகை இல்லை : டெல்லியில் எம்.பி டி.ஆர்.பாலு பேட்டி

புதுடெல்லி : தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றியடையும் என்பதால் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக சலுகை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சாலை, உள்கட்டமைப்பு உட்பட என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறும்போது, மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் செய்ய முடியாத ஒன்றுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் நடைமுறைப்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மத்தியில் பாஜ ஆட்சியானது முடிவடைந்து விடும். உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை இந்த ஆண்டே தொடங்க உள்ளதாக பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டுள்ளார். அதற்கான சாத்தியமே கிடையாது.

இதில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. முக்கியமாக மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையைவிட தமிழகத்திற்கு குறைவாக தான் வழங்கப்ப்ட்டுள்ளது. குறிப்பாக அசாம் மாநில தேயிலை தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கியுள்ள மத்திய அரசு தமிழகத்தின் தேயிலை தொழிலாளர்களை கணக்கில் கொள்ளவில்லை.அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏனெனில் தமிழகத்தில் கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றிப் பெற்று ஆட்சியை அமைக்கும், பாஜவால் அங்கு காலூன்ற முடியாது. அதனால் சலுகை வழங்கினாலும் பயன் கிடையாது என நினைத்து தமிழகத்தை திட்டமிட்டே வஞ்சித்துள்ளனர், என்றார்.


Tags : Palu ,Tamil Nadu ,interview ,DMK ,assembly elections ,Delhi , DMK, Victory, Delhi, MP DR Palu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...