×

ஓட்டலை இடிக்கும் உத்தரவிற்கு தடை கேட்டு : உச்ச நீதிமன்றத்தில் சோனுசூட் மேல்முறையீடு

புதுடெல்லி: ஓட்டலை இடிப்பது தொடர்பான விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி நடிகர் சோனுசூட் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சோனு சூட், தமிழில், கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர்களுக்கு உதவிகள் செய்ததால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இவருக்கு சொந்தமாக மும்பை ஜுஹூ பகுதியில் 6 மாடிகள் கொண்ட ஓட்டல் உள்ளது. இதில் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதியை அவர் ஓட்டலாக மாற்றிவிட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சோனு சூட்டிற்கு நோட்டீஸ் அனுப்பினர். அதோடு அதனை இடிக்கும் முயற்சியும் மேற்கொண்டனர்.

இதனை எதிர்த்து சோனுசூட் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து ஓட்டலை இடிக்க இரண்டு நாட்கள் மட்டும் இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் பின்னர் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.இந்த நிலையில் நடிகர் சோனுசூட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,\” ஓட்டல் விவகாரத்தில் எந்தவித விதிமீறல்களும் இல்லை. மேலும் குடியிருப்புக் கட்டடத்தை வர்த்தகப் பயன்பாட்டுக் கட்டடமாக மாற்றுவதற்காக மகாராஷ்டிரா கடற்கரையோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் மட்டுமே இன்னும் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதில் சட்டவிதிகள் எதுவும் மீறப்படவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு இந்த செயலை சிலர் மேற்கொள்ள முயற்சி செய்கிறார்கள். அதனால் இந்த விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்\” என தெரிவித்துள்ளார்.

Tags : Sonu Sood ,Supreme Court , சோனுசூட்
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...