ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் போது விபத்தில் விலங்குகள் பலியாவதை தடுக்க பசுமை பாலங்களை அமைக்கலாம் : நீதிபதிகள் கருத்து

சென்னை: வனப்பகுதிகள் மற்றும் விலங்குகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை வனப்பாதுகாவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், மசினக்குடியில் 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி யானை உயிரிழந்த சம்பவங்களை மேற்கோள்காட்டி, ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை மீட்பது குறித்து ஆலோசனைகள் வழங்க  சர்வதேச  கால்நடை ஆலோசகர்களை நிரந்தரமாக நியமிக்க கோரி, யானைகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை மீட்பதாக கூறி, அதிகளவில் மயக்கமருந்து செலுத்தியும், கும்கி யானைகளை பயன்படுத்தியும் வனத்துறையினர் துன்புறுத்துகிறார்கள்.

வனத்துறையினரின் அக்கறையின்மையும், யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் இல்லாததும், போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததுமே, காட்டு யானைகளின் மரணங்களுக்கு காரணம்.எனவே, யானைகளை கொண்டு செல்ல குஷன் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் கொண்ட லாரிகளை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். சர்வதேச ஆலோசகரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 4  வாரங்களில் உரிய முடிவை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிட்டது. அதேசமயம், இந்தியாவிலேயே நிபுணர்கள் உள்ளதால், சர்வதேச ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் எனக் கூற முடியாது. உள்நாட்டு ஆலோசகர்கள் இதுவரை நியமிக்கப்பட்டிருக்காவிட்டால் அவர்களை நியமிக்க வேண்டும். ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் போது  விபத்தில் விலங்குகள் பலியாவதை தடுக்க பசுமை பாலங்களை அமைக்கலாம்.வனப்பகுதிகள் மற்றும் விலங்குகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும், தலைமை வனப்பாதுகாவலருக்கும்  அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories:

>