×

2021 அமைதிக்கான நோபல் பரிசு!: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், கிரேட்டா, நாவல்னி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை..!!

ஓஸ்லோ: 2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரேட்டா, நாவல்னி உள்ளிட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு தகுதி உடையவர் என தாங்கள் நினைக்கும் பெயர்களை நோபல் பரிசை வென்றவர்கள் உள்ளிட்டோர் நார்வே நோபல் கமிட்டியிடம் பரிந்துரைத்தனர். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசிற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பர்க், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி உள்ளிட்ட பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர உலக பொது சுகாதார அமைப்பு, இனவெறிக்கு எதிரான இயக்கமாக உருவாகிய பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆகிய பெயர்களும் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை நார்வே நோபல் கமிட்டி, பரிசீலனை செய்து வரும் அக்டோபரில் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவிக்கும். கடந்த ஆண்டு ஐநா-வின் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட முயலும் தலைசிறந்த நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள நோபல் குழு இந்தப் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும். ஏற்கனவே, நோபல் பரிசு பெற்றவர்கள், சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றங்கள் என பலரும் விருதுக்கு சரியான நபர்களை பரிந்துரைக்கலாம். அதன்படி நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் தங்கள் பரிந்துரைகளை வழங்கி வருகின்றன.

Tags : Trump ,US ,Greta ,Navalny , 2021 Peace, Nobel Prize, Trump, Names, Nomination
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...