×

அண்ணா பல்கலையில் இரு எம்.டெக் பிரிவுகள் நிறுத்தம் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டுக்கு நடவடிக்கை வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.டெக்., பயோடெக்னாலஜி, “எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் அகில இந்தியத் தேர்வு மூலம், இந்த பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இந்த முறை அண்ணா பல்கலைக்கழகமே மாணவர் சேர்க்கையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் - தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் பாஜ அரசோ, மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் மாத ஊக்கத் தொகையாக வழங்கப்படும் ரூ.12500ஐ ரத்து செய்து விடுவோம் என்று, இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அடம்பிடித்து - அராஜகம் செய்துள்ளது. “மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்புடையதல்ல என்பதால், 2020-21ம் ஆண்டில் மேற்கண்ட இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடத்த முடியாமல் இருக்கிறோம்” என்று அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான தனது பிடிவாதத்தை உடனடியாக மத்திய பாஜ அரசு கைவிட்டு மேற்கண்ட எம்.டெக்., படிப்புகளுக்கும் தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையே இல்லை என்று அறிவித்திருப்பதைத் திரும்பப் பெற்று 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் உள்ள மேற்கொண்ட இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : departments ,M.Tech ,Anna University ,MK Stalin , Anna University to suspend two M.Tech units
× RELATED புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய...