வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பிப். 3ம் தேதி அரசுடன் பாமக பேச்சுவார்த்தை: முடிவை பொறுத்து கூட்டணி நிலைப்பாடு

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பிப்ரவரி 3ம் தேதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அழைப்பை பாமக ஏற்றுள்ளது. அதன் முடிவை பொறுத்து தேர்தலில் அரசியல் நிலைப்பாடு எடுக்கப்படும் என்று சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக ஜனவரி 9ம் தேதி நடைபெற்ற பாமக கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு தொடர்பான முடிவை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாமக நிர்வாகக் குழு மீண்டும் கூடி முடிவெடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, வன்னியர் இடப்பங்கீடு குறித்து தமிழக அரசிடமிருந்து பதில் வராத நிலையில், அரசியல் முடிவு எடுப்பதற்காக நிர்வாகக்குழு ஞாயிற்றுக்கிழமை (31ம் தேதி) கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் பாமக நிறுவன தலைவர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது வன்னியர்களுக்கான இடப்பங்கீடு குறித்து தமிழக அரசு குழுவும், பாமக குழுவும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி சென்னையில் சந்தித்து பேசலாம் என யோசனை தெரிவித்தனர். இந்தவிவரங்களை நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கினார். அதனடிப்படையில் நிர்வாகக் குழுவில் நடைபெற்ற விவாதங்களின் முடிவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 3ம் தேதி அரசுடனான பேச்சுகளில் பங்கேற்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவை எடுப்பது என்று பாமக நிர்வாக் குழு தீர்மானித்துள்ளது.

Related Stories:

>