பரிசளித்த வேல் வைத்திருந்தால் முதல்வருக்கு என்ன பிரச்னை அதிமுக ஆட்சியை மக்கள் சூரசம்ஹாரம் செய்வார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பரிசளித்த வேல் வைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன பிரச்னை. வேல் பார்த்து அவர் எதற்கு பயப்படுகிறார். சூரசம்ஹாரம் செய்துவிடுவேன் என்றா. ஜனநாயக ரீதியில் மக்கள் அதிமுக அரசை சூரசம்ஹாரம் செய்வார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டையில் நேற்று நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் சார்பில் பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி, திருவள்ளுர், கும்மிடிபூண்டி, பொன்னேரி ஆகிய 6 தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் திருவள்ளுர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு. நாசர், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெகத்ரட்சகன் எம்பி, எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வீ.ஜி. ராஜேந்திரன், மாவட்ட குழு தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றிய செயலாள் பூவை ஜெயக்குமார், மீஞ்சூர் ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் விரைவில் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். அந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் திமுக பெறப்போகிறது. நான் 200 தொகுதிகள் என்று சொன்னேன். ஆனால் 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உருவாகி இருக்கிறது. அதிமுக ஆட்சியால் இந்த தமிழகத்திற்கு எல்லா வகைகளிலும் கேடுகள் சூழ்ந்து விட்டது. உரிமை பெற்ற தமிழகமாக இல்லை. உணர்வு பெற்ற தமிழகமாக இல்லை. சுய ஆட்சி பெற்ற தமிழகமாக இல்லை. சுரணையற்ற தமிழகமாக இருக்கிறது. அடிமைத் தமிழகமாக இருக்கிறது. ஊழல் தமிழகமாக இருக்கிறது.

10 ஆண்டுகளாக இந்தக் காட்சிகளைத்தான் நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறிது காலம் ஓ.பன்னீர்செல்வம் வழக்கம்போல் பொம்மை முதலமைச்சராகி, இந்த அரசை செயல்படாமல் முடக்கி வைத்திருந்தார்.அடுத்த 5 ஆண்டு காலத்தில், தங்களுடைய நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், கொள்ளையடிப்பதற்காகவும், அந்த கொள்ளைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், ஒரு சுயநல ஆட்சியை பழனிசாமியும், பன்னீர் செல்வமும் கொடுத்தார்கள். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தங்களுடைய சுயநலத்திற்காக சூறையாடிய மாபெரும் குற்றவாளிகள் தான் பழனிசாமியும் - பன்னீர்செல்வமும்.

இரண்டு பேரும் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணம் எவ்வளவு என்று அவர்களுக்கே தெரியாது. அவர்கள் இருவரும் எதிரிகள்தான். அவர்கள் இருவருக்கும் ஆகாது. ஆனால் ஒன்றாகத்தான் இருப்பார்கள். ஏன் என்றால் அவ்வாறு நடித்தால் தான் சுருட்ட முடியும். அதனால் ஒன்றாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கோயிலை திறந்து வைத்துப் பேசிய பழனிசாமி, திருத்தணியில் நான் வேல் வைத்திருந்ததை விமர்சித்துள்ளார். வேல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. அதை நான் வைத்திருந்தேன். கடவுள் நம்பிக்கை கூடாது என்று நாம் சொல்கிறோமா. “கோயில்கள் கூடாது என்பதல்ல கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாது என்பதற்காக” என்று பராசக்தி திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எடுத்துக் கூறியிருக்கிறார். இதில் பழனிசாமிக்கு என்ன பிரச்னை வந்தது. வேலைப் பார்த்ததும் எதற்காக அவர் பயப்படுகிறார்.

சூரசம்ஹாரம் செய்துவிடுவேன் என்று பயப்படுகிறாரா. அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக மக்கள் அதைத்தான் நிச்சயம் செய்யப் போகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு மட்டுமல்ல, பழனிசாமி - பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கைக்கும் சேர்த்தே முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்தான் இந்தத் தேர்தல் அவர்களை நான் விமர்சிப்பது என்பது தனிப்பட்ட முறையில் அல்ல. பழனிசாமி மீதோ, பன்னீர்செல்வம் மீதோ எனக்கு எந்தப் பகையும் இல்லை. அவர்களது அரசியல் நடவடிக்கைகள் தவறானது. அவர்களது ஆட்சி சுயநலமானது. அதனால் தான் விமர்சிக்கிறேன். அரை நூற்றாண்டு காலம் இந்த சமுதாயத்துக்காக உழைத்தவன் நான். உழைக்க காத்திருப்பவன் நான். எனது உழைப்பின் மூலமாக இந்த இனம், நாடு, நாட்டு மக்கள், இளைஞர்கள், பெண்கள், அனைத்து சமூக மக்களும் பயனடைய எந்நாளும் உழைப்பேன் என்ற உறுதிமொழியை உங்களுக்கு வழங்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

* எம்ஜிஆர் சொன்ன அறிவுரை என்ன?

1971ம் ஆண்டு தேர்தலுக்கு நான் பிரசார நாடகம் நடத்தினேன். ‘முரசே முழங்கு’ என்ற பிரசார நாடகத்தில் எனக்கு கலைஞர் வேடம். அந்த தேர்தலுக்குப்பிறகு வெற்றி விழா நடத்த முடிவு செய்து, அதற்காக தலைவரிடமும், எம்.ஜி.ஆரிடமும் தேதி வாங்கினேன். நாடகம் நடக்கிறது. தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போது எம்.ஜி.ஆர் பேசிய போது, “நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள். ஒழுங்காக படித்து, இப்போது எந்த அளவிற்கு அரசியலில் ஆர்வமாக இருக்கிறாயோ அதே அளவிற்கு இனிமேலும் இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னார்.

* பாண்டியராஜன் பாஜ செல்வார்

திமுக தலைவர் பேசுகையில், ஆவடி தொகுதியை பொறுத்தவரையில், பாண்டியராஜன் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, அமைச்சரும் ஆவார். அவர் முதலில் பாஜ, அடுத்து தேமுதிக, அடுத்து அதிமுக, இப்போதும் தோற்றதும் மறுபடியும் பாஜகவுக்கு செல்கிறாரா, இல்லையா என்று பாருங்கள் என்றார்.

* வழக்கு போடுங்கள்...

அதிமுகவின் ஐ.டி. விங், ‘ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார். நாங்கள் 2 மாதத்திற்கு முன்பாகவே அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்துவிட்டோம்’ என்று டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் கடந்த 29ம் தேதியன்று அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதற்கு ஆதாரம் உள்ளது. உண்மையில் அதிமுக ஐ.டி.விங்கிற்கு தெம்பு இருந்தால் திராணி இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்.  நான் சொல்வது பொய்யாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நீங்கள் சொன்னது பொய்யாக இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுப்பேன் என்று பேசினார்.

Related Stories:

>