×

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி டிடிவி.தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுக பரிசீலிக்கும்

காவேரிப்பட்டணம்: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நேற்று அளித்த பேட்டி: கட்சியில் இல்லாத சசிகலா, அதிமுக கொடியை அவர் சென்ற காரில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது. அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு, சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பை உருவாக்கி செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக செயல்பட்டு வருகிறது. ஆகையால், பொதுச் செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் தான். மற்றவர்கள் அவர்களின் சுய நலத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறுகிறார்கள். அதை ஏற்க முடியாது.

ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர், இந்த கட்சியை கைப்பற்றுவோம் என சொல்வது கேலிக்குரியது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்தது. அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை, எப்படி நீக்க முடியும்?. டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட ஒருவர், அரசியல் செய்வதற்காக தொடங்கப்பட்ட கட்சிதான் அமமுக. அப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் அதிமுக இணைவதற்கு வாய்ப்பு இல்லை. வேண்டுமென்றால் டிடிவி தினகரன், அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கடிதம் கொடுத்து, தன்னை அதிமுகவில் இணைக்க கோரினால் அதை அதிமுக தலைமை பரிசீலனை செய்யும். பரிசீலனையின் அடிப்படையில், அவரை ஏற்பதாக முடிவெடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம். அப்படியில்லாமல், அவர் கட்சியில் சேருவதற்கே தகுதியில்லாத நபர் என்றால், அவரின் மன்னிப்பு கடிதம் குப்பைத்தொட்டிக்கு சென்று விடும். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

* சசிகலா மீது வழக்கு: அமைச்சர் எச்சரிக்கை
விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தற்போது அதிமுக கட்சி கொடியை சட்டவிரோதமாக தனது காரில் பயன்படுத்தியதற்கு சசிகலா மீது உரிய வழக்கு நிச்சயமாக பதிவு செய்யப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தையோ, கொடியையோ பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலைமையிலானது தான் உண்மையான அதிமுக. அதிமுக எங்கள் சொத்து, அதிமுக கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. அதிமுகவில் டிடிவி.தினகரனுக்கும், சசிகலாவுக்கும் ஒரு போதும் இனி இடமில்லை என்றார்.

Tags : Deputy Coordinator ,AIADMK ,interview ,KP Munuswamy ,DTV.Dhinakaran , AIADMK will consider apology letter from AIADMK deputy coordinator KP Munuswamy
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...