×

மதுரையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு கோதாவரி-காவிரி இணைக்க திட்டம் தயார்

மதுரை: வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மாநாடு, மதுரை, ஒத்தக்கடையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: முத்தரையர் சமூகம், தற்போது வேளாண் தொழில் செய்யும் சமூகமாக உள்ளது. வேளாண்மையை பாதுகாக்க தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோதாவரியையும், காவிரியையும் இணைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காவிரி - குண்டாறு இணைப்புக்காக ரூ.6 ஆயிரத்து 80 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

வேளாண் மக்களுக்காக தமிழகத்தில் அதிகளவில் கால்நடை மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை உருவாக்கியுள்ளோம். தேனி, உடுமலையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பிடுகு முத்தரையர் முழு உருவச்சிலை சேலம் கோ.அபிசேகபுரத்தில் நிறுவப்படும். மதுரை மாவட்டத்தில் வலையங்குளம், ஆனையூரில் சிலை நிறுவ உரிய அனுமதி பெறப்படும். முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், வளர்மதி, எம்எல்ஏக்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* சிலை வைக்க அரசின் தடை
முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், விழா நடத்திய தலைவர் உள்ளிட்ட யாரையும் பேசவிடவில்லை. ஜெயலலிதா பாணியில், மேடை ஏறியவுடன், வரவேற்பு முடிந்தவுடன் முதல்வர் பேசிவிட்டு சென்றுவிட்டார். முதல்வர் அறிவித்த மதுரை, ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க, திமுக சார்பில் ஏற்கனவே இம்மாதம் 17ம் தேதி பூமிபூஜை போடப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வந்தது. அதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து, ஐகோர்ட் கிளையில் தடையாணை பெற்று நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Madurai ,Edappadi , Madurai Chief Minister Edappadi announces plans to merge Godavari-Cauvery
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு:...