மணிமாறன் அபார பந்துவீச்சு தமிழக அணிக்கு 121 ரன் இலக்கு

அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் இறுதிப் போட்டியில், தமிழக அணிக்கு வெற்றி இலக்காக 121 ரன்களை பரோடா நிர்ணயித்தது. சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீச முடிவு செய்தது. பரோடா தொடக்க வீரர்களாக கேப்டன் கேதார் தேவ்தர், நினத் ரத்வா களமிறங்கினர். ரத்வா 1 ரன், தேவ்தர் 16 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஸ்மித் படேல் 1 ரன்னிலும், பானு பனியா டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து அபிமன்யுசிங் 2, கார்த்திக் காக்கடே 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, பரோடா அணி 8.5 ஓவரில் 36 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், விஷ்ணு சோலங்கி - அதித் ஷேத் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். சேத் 29 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய விஷ்ணு 49 ரன் (55 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். பாபாஷபி டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, பரோடா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்தது. பார்கவ் பட் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக பந்துவீச்சில் மணிமாறன் சித்தார்த் 4 ஓவரில் 20 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

பாபா அபராஜித், சோனு யாதவ், எம்.முகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. ஹரி நிஷாந்த், நாராயண் ஜெகதீசன் இருவரும் துரத்தலை தொடங்கினர். ஜெகதீசன் 14 ரன், ஹரி நிஷாந்த் 35 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேற, தமிழக அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், பாபா அபராஜித் - கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது.

Related Stories:

>