×

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்..! அவையில் 38 மசோதாக்களை கொண்டு வர திட்டம்

புதுடெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 38 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிறகு முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். கடந்த அக்டோபரிலிருந்து தொடங்கியுள்ள அடுத்த நிதியாண்டிற்கான (2021-22) இந்த  பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்றும், மக்களின்  எதிர்பார்ப்புகளுக்கேற்ப இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றம் மற்றும் நிலக்கரி கனிமங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ‘நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் 5 நிதி மசோதாக்கள் உள்ளிட்ட 38 மசோதாக்கள் கொண்டு வரப்படும்.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவேண்டிய அணை பாதுகாப்பு, மின்சார மசோதா உள்ளிட்ட 29 மசோதாக்களும் தயாராக இருக்கின்றன. இதில் சில மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற காத்திருக்கின்றன. 2021-22ம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை தொடர்பான 3 மசோதாக்கள், இரு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிதி மசோதாக்கள், குடியரசுத் தலைவர் உரை, நிதி நிலை அறிக்கை விவாதங்கள் மற்றும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் ஆகியவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும்’ என்றார்.டெல்லியில், நிதியமைச்சக வளாகத்தில் உள்ள அச்சகத்தில், பட்ஜெட் அறிக்கைகள் அச்சிடப்படுவது வழக்கம்.

பட்ஜெட் ரகசியம் கசிவதை தடுக்க, நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரு வாரங்களுக்கு மேலாக, அச்சகத்தில் தங்கி பணியாற்றுவர். இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, பட்ஜெட் அறிக்கை அச்சடிப்பது ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதன் முறையாக, காகிதம் இல்லாத பட்ஜெட் ஆவண நடைமுறை நாளை அமலுக்கு வர உள்ளது. நாட்டு மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், பட்ஜெட் அறிக்கையை, ‘லேப்டாப்’ உள்ளிட்டவற்றில் பதிவிறக்கி பார்க்கும் வசதி செய்யப்படுகிறது. இத்துடன், ‘பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர்’ செயலியில் பதிவிறக்கம் செய்து பட்ஜெட்டை பார்க்கலாம். இந்த செயலியில், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மத்திய பட்ஜெட், மானிய கோரிக்கை, நிதி மசோதா உட்பட 14 வகையான ஆவணங்களை பதிவிறக்கி பார்க்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலி தவிர, மத்திய பட்ஜெட் வலைதளத்தில் இருந்தும், பட்ஜெட் அறிக்கையை பதிவிறக்கம் செய்து பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : crisis ,Corona , Federal budget to be tabled tomorrow amid economic crisis caused by Corona ..! The plan is to bring 38 bills in them
× RELATED குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி!:...