ஏர்வாடி அருகே சுற்றுலா படகு போக்குவரத்து துவக்கம்

கீழக்கரை: சர்வதேச சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஏர்வாடி அருகே உள்ள மணல்திட்டுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசை கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மணல் திட்டு உள்ளது. பிச்சைமூப்பன் வலசை கடற்கரையிலிருந்து இந்த மணல் திட்டுக்கு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் நேற்று மாலை 5 மணியளவில் சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து துவக்கியது. நிகழ்ச்சிக்கு மன்னார் வளைகுடா காப்பக இயக்குனர் மாரிமுத்து தலைமை வகித்தார். படகு போக்குவரத்தை ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ் துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் வளர்ச்சி அலுவலர் கணேசலிங்கம் முன்னிலை வைத்தார்.

நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் லோகநாதன், துணை மண்டல அலுவலர் கனகராஜ் மற்றும் காளிதாஸ், கவுன்சிலர் மலை ராஜ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி சுற்றுலா பயணிகள் 12 பேர் பாதுகாப்பு உடையணிந்து படகில் பயணம் செய்தனர். சுற்றுலா படகில் பயணம் செய்ய ஒரு நபருக்கு தலா ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை சுற்றுலா படகு இயக்கப்படுகிறது.

இதன் மூலம் பவள பாறைகள் உள்ளிட்ட அரிய‌ கடல் வாழ் உயிரனங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும். உலகின் அரிய வகை கடல் உயிரனங்கள் உள்ள இந்த கடல் பகுதி சர்வதேச கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய ஏற்ற இடமாகும்.

இது குறித்து வளைகுடா காப்பக இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், ‘‘மணல்திட்டு பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுச்சூழல் சிறப்பம்சங்கள் உள்ளன. இப்பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும், பவள பாறைகளும், கடல் பாசிகளும், நிரம்பி காணப்படுகின்றன. படகில் பயணம் செய்யும்போது கடலுக்கு அடியில் உள்ள அரிய வகை கடல் வாழ் உயிரினங்களையும், கடல் ஆமைகள், டால்பின், கடல் குதிரை, கடல் பல்லி உள்ளிட்டவைகளையும் பார்க்கலாம். படகு சுற்றுலா மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும்’’ என்றார்.

Related Stories: