×

வன்னியருக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு..! பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும் என அறிவிப்பு

சென்னை: வன்னியருக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும் என ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக சிறப்பு நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்த தமிழக அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையை பாமக ஏற்றுக்கொண்டது. பேச்சுவார்த்தியின் முடிவை பொறுத்து பாமக நிர்வாகக் குழுவை கூட்டி அரசியல் முடிவு எடுக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது.  தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் குழு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

ஆனால், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின்போது தனி ஒதுக்கீடு ஆணையை, பரிந்துரை வந்தபிறகு வழங்குங்கள். இப்போதைக்கு உள் ஒதுக்கீடாவது கட்டாயம் வேண்டும் என கூறியுள்ளார் ராமதாஸ். மிகவும் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று விவாதித்துள்ளனர்.  அப்போது கூட்டணியில் தொகுதி எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை. உள் ஒதுக்கீட்டிலாவது தான் எதிர்பார்க்கும் இரட்டை இலக்க சதவீதம் கட்டாயம் வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

பேச்சுவார்த்தை விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்து சென்றனர். இந்த சூழ்நிலையில் பாமக சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன், டாக்டர்  ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்களின் அழைப்பை ஏற்று சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்து அரசியல் முடிவை அறிவிப்போம் என்றும் திர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, 3ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இடஒதுக்கீடு தொடர்பான உத்தரவாதம் கொடுக்கப்பட்டால் கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்திற்கு நகரும்.


Tags : Vanni ,Announcement ,Bamaka ,talks , 20% reservation for Vanni ..! Announcement that Bamaka will participate in the talks to be held on February 3
× RELATED சட்ட போராட்டம் நடத்தி...