×

கூட்டணி கட்சியினரும் களத்தில் குதித்தனர்; கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு அதிமுகவினரிடையே கடும் போட்டி: தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு

வேலூர்:: வேலூர் மாவட்டத்தில் கடந்த 2011ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் புதிய சட்டமன்றத் தொகுதியாக கீழ்வழித்துணையான் குப்பம் என்னும் கே.வி.குப்பம் தொகுதி (தனி) உருவாக்கப்பட்டது.  குடியாத்தம், காட்பாடி தொகுதிகளில் சில ஊராட்சிகளை பிரித்து கே.வி.குப்பம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி முழுவதும் கிராமங்களையே கொண்டது தனிச்சிறப்பு. தொகுதியின் வடக்குப் பகுதி முழுவதும் ஆந்திர மாநில எல்லையாக அமைந்துள்ளது. இந்த தொகுதி மறுசீரமைப்பில் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் 32 ஊராட்சிகளும், கே.வி. குப்பம் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளும், காட்பாடி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளும் மொத்தம் 73 ஊராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகள் கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகள், காட்பாடி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை இந்த ெதாகுதிக்கு 2 சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் 72,002 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவரான அதிமுகவை சேர்ந்த ஜி.லோகநாதன் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 75,612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறையும் 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டிகள் தொடங்கிவிட்டது. இதில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள லோகநாதன் இந்த முறையும் தனக்கு தான் சீட் வேண்டும் என்று கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம். மேலும் காட்பாடி ஒன்றிய செயலாளரான கே.எஸ்.சுபாஷ் மற்றொரு புறம் சீட் கேட்டு கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து, கே.வி.குப்பம் தொகுதிக்கு சீட் வாங்கியே தீர வேண்டும் என்ற முடிவில் உள்ளார்.

இதே அதிமுகவில் ஒன்றிய துணை செயலாளராக உள்ள அன்னங்குடி பொன்முடியும், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமாரும் சீட் வாங்கும் போட்டியில் பங்கேற்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி அதிமுகவில் மட்டுமே ஒரே தொகுதிக்கு 4 பேர் நேரடியாக போட்டி போட்டுக்கொண்டிருப்பதாக அதிமுகவில் இருந்தே தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. கட்சிக்குள்ளேயே இந்த போட்டிகள் நிலவுவதால், கோஷ்டிகளும் உருவாகத்தொடங்கியுள்ளது. இந்த போட்டி கட்சிக்குள்ளேயே யாருக்கு சீட் வழங்குகிறார்கள் என்பதை பார்த்துத்தான் அது வெடிக்குமா, வெடிக்காதா? என்று தெரியுமென அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சீட் வாங்கும் போட்டிகள் இப்படி இருக்க, சிட்டிங் எம்எல்ஏ, தொகுதியின் அருகே உள்ள காட்பாடியில் நிரந்தரமாக குடியேறியதால், தொகுதி மக்கள் லேசான அதிருப்தியில் உள்ளார்கள். இது எம்எல்ஏ லோகநாதனுக்கு, பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பயன்படுத்திக்கொண்டு எம்எல்ஏ லோகநாதனுக்கு எதிராக பொன்முடியும், ரமேஷ்குமாரும் களத்தில் குதித்துள்ளனர். அதேபோல் தொகுதியின் முன்னாள்  எம்எல்ஏவும் இந்திய குடியரசு கட்சி தலைவருமான செ.கு.தமிழரசன் மீண்டும்  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இந்த தொகுதியிலேயே போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால் அதிமுக கூட்டணியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் கூட்டணி கட்சியான பாஜவும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கேவிகுப்பம் தொகுதியில் களத்தில் இறங்க தயாராகி உள்ளது. வேலூர் முன்னாள் மேயரும், பாஜ மாநில செயலாளருமான கார்த்தியாயினி போட்டியிட விருப்பம் தெரிவித்து காய்நகர்த்தி வருகிறார். எப்படியும் பாஜவுக்கு தான் சீட் என்று கூறி அக்கட்சியினர் களத்தில் இறங்கி உள்ளனர். இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு கேவிகுப்பம் ெதாகுதியை கேட்பதற்கு காரணம் ஒன்றையும் சொல்கிறார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் இருமுறை அதிமுக இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தொகுதியில் மீண்டும் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்று அதிமுகவினர் உறுதியாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெறுவதால், இந்த முறை கூட்டணிகட்சியான பாஜவுக்கு சீட் கொடுத்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று அக்கட்சியினர் நினைக்கின்றனர். அதேபோல் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசனும் ஏற்கனவே, தான் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இந்த முறையும் வெற்றி வாய்ப்பை பெற்றுவிடலாம் என்று எண்ணி அதிமுக கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இப்படி கே.வி.குப்பம் தொகுதியில் தேர்தல் களைகட்டத்தொடங்கிவிட்டது.

வாக்காளர்கள் விவரம்
ஆண் வாக்காளர்கள் - 1,09,836
பெண் வாக்காளர்கள்     - 1,14,389
மூன்றாம் பாலினத்தவர்கள் - 5
மொத்த வாக்காளர்கள் - 2,24,230

குடிநீர் பிரச்னை தீர்க்க வேண்டும்
ேக.வி.குப்பம் தொகுதியை பொறுத்தவரையில் அங்குள்ள மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. கே.வி.குப்பம் தொகுதியில் போதிய மருத்துவ வசதி இல்லை. அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். அந்த மருத்துவமனையில் போதிய வசதியில்லாததால், சிகிச்சைக்காக குடியாத்தம், வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையாக உள்ளது. எனவே வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அதேபோல் பள்ளி படிப்பை முடித்துவிட்டு மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பை தொடங்க 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குடியாத்தம் அரசு கல்லூரிக்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால், 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேலூர் அரசு கல்லூரிக்கு செல்ல வேண்டும். எனவே கே.வி.குப்பம் தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்.

அதேபோல் கே.வி.குப்பம் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தீ அணைக்க முடியாமல் பெரும் விபத்துக்கள் ஏற்படுகிறது. தீ விபத்தை தடுக்க காட்பாடி, குடியாத்தத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டியுள்ளது. அதற்குள் சேதம் அதிகளவில் ஏற்பட்டு விடுகிறது. எனவே இந்த தொகுதியில் தீயணைப்பு நிலையம் கொண்டுவர வேண்டும். இந்த தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகளவில் உள்ளது. எனவே காவிரி கூட்டு குடிநீர் கே.வி.குப்பம் பகுதிக்கு கொண்டு வர வேண்டும். கே.வி.குப்பம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

மின்சார வசதியில்லாத கிராமங்கள்
கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலான கிராமங்கள் ஆந்திர மாநில எல்லை பகுதிகளில் உள்ளது. இங்கு பல கிராமங்களில் அடிப்படை வசதிகளே இல்லை. நாகல் ஊராட்சிக்கு உட்பட்ட தேனிகனி மலை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் உள்ளனர். அவர்களுக்கு குடிநீர், சாலை, மின் விளக்கு வசதி இல்லை.காங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாணி கிணறு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேல்மாங்குப்பம், மூல காங்குப்பம் ஆகிய இடங்களில் பகுதிநேர நியாயவிலை கடைகள் மட்டுமே உள்ளது.

முழுநேர நியாயவிலை ஏற்படுத்தக்கோரி பல ஆண்டுகளாக அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேவரிஷி குப்பத்தில் இருந்து சித்தூர் செல்ல அனுப்பு, மோட்டூர் வழியாக எளிதாக சித்தூர் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லலாம். குறுக்கே மோர்தானா இடதுபுற கால்வாய் செல்வதால் அந்த சாலையில் செல்ல முடியவில்லை. எனவே நீண்ட நாட்களாக கால்வாயின் குறுக்கே பாலம் அமைத்து தர கோரி வருகின்றனர்.

சுற்றுலா தலமாக்க வேண்டும்
கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்தில் பஸ் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில், மழை காலங்களில் பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். மகாதேவமலை சிறந்த இடமாக உள்ளதால் சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாதோப்பு அணையில் பூங்கா இருந்தது. இந்த அணை தூர்வாரப்படவில்லை. பூங்கா பராமரிப்பின்றி பொட்டல் காடாக மாறிவிட்டது. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coalition parties ,AIADMK ,Constituency ,KV Kuppam Assembly , Coalition parties also jumped on the bandwagon; Fierce competition among AIADMK candidates for seats in KV Kuppam Assembly constituency: Constituency people's expectation
× RELATED சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண...