×

பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவு முட்டையில் கோழிக்குஞ்சு: காலாவதியானதாக பெற்றோர் குற்றச்சாட்டு

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையில் உயிரிழந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததால் மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர். காலாவதியான முட்டை வழங்குவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் மதிய உணவு மாணவர்களுக்கு உணவுடன் அவித்த முட்டை வழங்கப்பட்டு வந்தது. அதேபோல அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பால் பள்ளிகள் இயங்காத நிலையில், பள்ளிகளில் மதிய உணவு உண்ணும் மாணவ, மாணவியருக்கு மாதத்திற்கு 10 முட்டைகள், அரிசி, பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டு,அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்குவதற்காக நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒருமுறை முட்டையை அறந்தாங்கியில் கொண்டுவந்து கொடுப்பார்.

பின்னர் அந்த முட்டை மதிய உணவு திட்ட சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையை அவித்து முட்டையின் ஓட்டை உடைத்தபோது அந்த முட்டையின் உள்ளே இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து சத்துணவு மைய பணியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் பல முட்டைகள் அவித்துவிட்டு ஓட்டை உடைத்தபோது கடுமையாக துர்நாற்றம் வீசியது, இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியது: கொரோனா தொற்றால் முட்டைகள் தேக்கமடைந்ததால், பள்ளிகளுக்கு தேங்கிய காலாவதியான முட்டையை ஒப்பந்தக்காரர்கள் வழங்கியுள்ளனர்.

மேலும் ஒரு முட்டையில் குஞ்சு உருவாக குறிப்பிட்ட வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை சத்துணவு மையங்களில் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் முட்டையில் குஞ்சு உள்ளது என்றால், நாமக்கல் பண்ணைகளில் குஞ்சு பொறிப்பதற்காக வைக்கப்பட்டு, குஞ்சு வெளிவராத வீணாகி போன முட்டைகளை அறந்தாங்கி பகுதி பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளனரா எனத்தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அறந்தாங்கி பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட முட்டைகள் அனைத்தையும் சோதனையிட்டு அவை நல்ல முட்டைதானா என்பதை கண்டறியவேண்டும். மேலும் காலாவாதியான முட்டையை வினியோகம் செய்த ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : school students ,Parents , Chicken in the egg provided to school students: Parents accuse it of being outdated
× RELATED மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச்...