×

விக்கிரவாண்டி தொகுதியில் ஆளுங்கட்சியில் சீட்டு பெற தீவிரம் காட்டும் பிரபலங்கள்: கூட்டணியில் பாமகவும் முட்டி மோதுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஆளுங்கட்சியில் சீட்டுகேட்டு, கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, கூட்டணியில் தங்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என்று பாமகவிலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுகவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தை துவங்கி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அதேசமயம், இரு கட்சியிலும், சட்டமன்ற தேர்தலில், டிக்கெட் பெறுவதில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட்டு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதால், மற்ற பிரபல நிர்வாகிகள் இந்த தேர்தலில் சீட்டு பெறுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் அதிமுகவின் வசம் இருக்கிறது. அதில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி 2016 சட்டமன்றதேர்தலில், திமுக வசமிருந்தது, அந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ ராதாமணி இறந்ததைத்தொடர்ந்து, 2019ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வசம் சென்றுவிட்டது.  இந்த தொகுதியின் எம்எல்ஏவாக முத்தமிழ்ச்செல்வன் இருந்துவருகிறார். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கண்டமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி, மறுவரையறை செய்யப்பட்டபோது நீக்கப்பட்டது. இதிலிருந்த சில பகுதிகள் வானூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு விக்கிரவாண்டி என்ற புதிய தொகுதி 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

மிகச்சிறிய இந்தத் தொகுதியில் விக்கிரவாண்டி மட்டுமே பேரூராட்சி. மற்ற அனைத்துமே கிராமங்கள்தான். விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள் தொகுதி மக்கள்.‌ 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றிப்பெற்றார். 201‌6ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளரான ராதாமணி வெற்றி வாகை சூடினார். ராதாமணி‌ எம்எல்ஏ உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை சந்தித்து, அதிமுக இதனை கைப்பற்றியுள்ளது. இடைத்தேர்தலில் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்று, ஒரு ஆண்டு காலம் மட்டுமே எம்எல்ஏவாக இருந்த அவர் தனக்கு மீண்டும் சீட்டு வழங்க வெளிப்படையாகவே பேசிவருகிறாராம்.  சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் சண்முகத்தின், முன்னிலையிலேயே, நான் ஓராண்டுகாலம் மக்கள் சேவைப்பணிகளை சிறப்பாக செய்தேன்.

கொரோனா காலமாக இருந்ததால் மக்களை சந்திக்க  முடியவில்லை. விடுபட்ட பணிகளை செய்யும் வகையில் வரும்தேர்தலில், வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறி, மேடையிலேயே சீட்டு கேட்டிருக்கிறார்.  அப்போது பேசிய, அமைச்சரோ, இந்த தொகுதியில் இரட்டை இலையை ஜெயிக்கவைக்கவேண்டும். மனக்கசப்புகளை மறந்து பணியாற்றவேண்டும், தலைமை யாரை அறிவிக்கிறதோ, அவர்களை வெற்றிபெறவைக்கவேண்டும். மேடையில், ஏன், இந்தகூட்டத்தில் வந்திருப்பவர்கள் யார்? வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறி கட்சியினரை உற்சாகபடுத்தியுள்ளார். சிட்டிங் எம்ல்ஏ சீட்டுகேட்டுவரும் நிலையில், முன்னாள் சேர்மன் இளங்கோ, காணை ஒன்றிய செயலாளர் ராஜா, ஏற்கனவே தோல்வியை தழுவிய சேவல்வேலு, முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர்,

முகுந்தன், பூர்ணராவ் உள்ளிட்டவர்கள் டிக்கெட்பெற முயற்சித்து வருகிறார்களாம். இந்ததொகுதியில் கனிசமான வாக்குவாங்கி வைத்துள்ள பாமக, அதிமுக கூட்டணியில் இணையும்பட்சத்தில் இந்ததொகுதியை பெற்றாகவேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்களாம். தனித்துபோட்டியின்போதே, வன்னியர் சங்கத்தைச்சேர்ந்த அன்புமணி, அதிகவாக்குகளை பெற்றுள்ளார்.  வெற்றிவாய்ப்புள்ள தொகுதி என்பதால், பாமகவினரும் விடா முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்களாம். அப்படியிருக்கும் பட்சத்தில் வன்னியர்சங்கம் அன்புமணி, பாமக மாநில நிர்வாகி வண்டிமேடு சிவக்குமார், மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோர்களில் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல், கூட்டணியில் தேமுதிகவும் இணையும்பட்சத்தில், இந்ததொதியை பெற அவர்களும் முனைப்புடன் உள்ளனர்.

திமுகவை பொறுத்தவரை இடைத்தேர்தலில்நின்று தோல்வியுற்ற மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர்சிவா, அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்டபிரதிநிதி வெங்கடேசன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். வெற்றிவாய்ப்பைகருதி, யாரேனும் ஒருவருக்கு சீட்டு வழங்கப்படலாம். அதேசமயம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டசெயலாளர் ஆர்பி ரமேஷ், இந்ததொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாராம். திமுவின் தொகுதி என்பதால், இடைத்தேர்தல் தோல்வியை தகர்த்தெரிந்து, வரும் தேர்தலில் மீண்டும் இந்ததொகுதியில் உதயசூரியன் உதித்தாகவேண்டும் என்பதில் கட்சித்தலைமை உறுதியாக இருக்கிறதாம். அதிமுகவினர் சென்டிமென்டாக விக்கிரவாண்டி தொகுதி வெற்றியை கருதுவதால், இந்த தொகுதியில் திமுக வெற்றிபெற்றாகவேண்டும் என்ற முனைப்பில் கட்சிப்பணியாற்றிவருகின்றனர்.

10 ஆண்டுகாலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை
விக்கிரவாண்டி தொகுதி 10 ஆண்டுகால, அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை என்று கூறப்படுகிறது. 2012ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டியில் தொழில்வளம், வேலைவாய்ப்பு என பெரிதாக எதுவும் இல்லை. அரசு கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்களும் இல்லை என்பதால், மாணவர்கள் விழுப்புரம்தான் செல்ல வேண்டும். விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்திருக்கும் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி தொகுதியில் தான் வருகிறது. அதுவும் திமுக ஆட்சியில்தான் கொண்டு  வரப்பட்டது. தற்போது, இடைத்தேர்தலில் முதலமைச்சரால் தீயணைப்புநிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் வெறும் அறிவிப்போடு நின்றதால், ஆளுங்கட்சி மீது இந்த தொகுதிமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் பரவலான கருத்து நிலவிவருகிறது.

Tags : Celebrities ,constituency ,Vikravandi ,party , Celebrities who are keen to get a ticket in the ruling party in Vikravandi constituency: Bamaka also clashes in the alliance
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...