×

திருப்போரூரில் பரபரப்பு: காவல் நிலையத்தை பாமகவினர் முற்றுகை

திருப்போரூர்: விசாரணைக்கு அழைத்த இன்ஸ்பெக்டர், உரிய மரியாதை கொடுக்கவில்லை என கூறி, பாமகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், திருப்போரூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (26).  கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கடேசன், பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதனால், பாமகவினருக்கும் வெங்கடேசனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு பாமகவினர் இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு காயார் கிராமத்தில் இருந்து பாமகவினர் சென்றதாக தெரிகிறது. இதை வெங்கடேசன், விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த பாமகவினர், போராட்டம் முடிந்து திரும்பி வந்து, வெங்கடேசனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் இதுகுறித்து, அதே ஊரை சேர்ந்த புருஷோத்தமன் (38), சுரேஷ்  (34) உள்பட 3 பேர் மீது காயார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பையும் சார் அழைத்து பேசினர். ஆனால், எந்த முடிவும் ஏற்படவில்லை. இதையடுத்து, பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் அருண்குமார் மற்றும் நிர்வாகிகள், திருப்போரூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரை சந்திக்க சென்றனர். அப்போது, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து பேசவில்லை. ஒருமையில் பேசிவதாக கூறி காவல் நிலையம் முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து பாமகவினர் வருமாறு வாட்சப் மற்றும் முகநூலில் பதிவிட்டனர். இதையொட்டி, அக்கட்சியினர் ஏராளமானோர் அங்கு வந்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்.ஐ. சங்கர் ஆகியோர் அவர்களிடம் பேசி, போராட்டத்தை கைவிட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலந்து கொண்ட வெங்கடேசனை, காவல் நிலையத்தின் உள்ளே பாமகவினர் சிலர் தாக்கினர். இதனால் பேச்சுவார்த்தையில் எந்த சமாதானமும் ஏற்படவில்லை. இதைதொடர்ந்து,  இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேசன், புருஷோத்தமன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Police station ,Thiruporur ,Pamakavins , Tirupporur sensation: the siege of the police station pamakavinar
× RELATED கிளாம்பாக்கம் புதிய காவல்...