×

பெண் போலீசுடன் ஏற்பட்ட காதலால் விபரீதம்: முதல் திருமணத்தை மறைத்ததால் வாலிபர் தற்கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் யுவராஜ் (24). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரும், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சங்கீதா (30) என்பவரும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன், கடந்த 4 மாதங்களுக்கு முன், அப்போதைய இன்ஸ்பெக்டர் அமுதா திருமணம் செய்து வைத்தார். இந்தவேளையில், சங்கீதாவுக்கு ஏற்கனவே  திருமணமாகி, 8 வயதில் குழந்தை இருப்பதும், கணவனை பிரிந்து வாழ்வதும் யுவராஜிக்கு தெரிந்தது.  மேலும், சங்கீதாவுக்கு மது அருந்தும் பழக்கமும், தற்போது, புருஷோத்தமன் என்பவருடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுபற்றி கேட்டபோது, அவர்களுக்குள் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, சங்கீதா கொடுத்த புகாரின்பேரில்  கடந்த 2 மாதத்துக்கு முன், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா, இருவரையும் விசாரித்து பிரித்து வைத்தார். காதலித்து திருமணம் செய்த ஏமாற்றத்தில், யுவராஜ், மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார்.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி சொந்த ஊருக்கு யுவராஜ் சென்றார். அப்போது அங்கு வந்த  சங்கீதா, தன்னை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிட்டனர். நான் அங்கு செல்கிறேன் என  கூறியுள்ளார். இதனால் மேலும் வேதனையடைந்த யுவராஜ் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில், அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்தவேளையில், சிகிச்சை பலனின்றி நேற்று  யுவராஜ் இறந்தார். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, யுவராஜ் இறப்பதற்கு முன் எழுதிய, ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அதில், ‘என் சாவுக்கு, மனைவி சங்கீதா மற்றும் தற்போதைய காதலன் புருஷோத்தமன், சங்கீதாவுடன் பணியாற்றும் காவலர்கள் தோழி  சந்தியா, ஜீவா ஆகியோர்தான். என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடித்து துன்புறுத்தினர்.  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில், யுவராஜின் உறவினர்கள், அவரது இறப்புக்கு  காரணமான சங்கீதா உள்பட 4 பேரையும் கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால், சடலத்தை வாங்க மாட்டோம் என கூறினர். இதனால் போலீசார், பிரேதத்தை சவ கிடங்கில் வைத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் சங்கீதா, வேலூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.



Tags : suicide ,Relatives , Female police officer commits suicide after falling in love with police: Relatives refuse to buy body
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...