×

ஆங்கில புத்தாண்டுக்கு காணும் பொங்கலுக்கு கிராமசபை கூட்டத்துக்கு கட்டுப்பாடு: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு மட்டும் அனுமதி: கொரோனாவிடமே பேசி முடித்து விட்டதா அரசு?

பண்டிகைகள், விவசாயிகள் போராட்டத்திற்கு மட்டும் தடை விதித்த அரசு ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை அனுமதித்தது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி 500 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 8,37,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8,20,381 பேர் குணமடைந்து விட்டனர். 12,345 பேர் மரணம் அடைந்துள்ளனர். 4,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவ்வாறு கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. பெரும்பாலான பணிகளை முழுமையாக மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இதற்கிடையில் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் விதிகளை மீறி இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மற்றும் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.  இதனைத் தொடர்ந்து பொங்கல் கொண்டாட்டத்திற்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. குறிப்பாக காணும் பொங்கல் நாள் அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிகமாக கூடி விடுமுறை கொண்டாடுவார்கள்.  ஆனால் இதற்கும் தமிழக அரச தடை விதித்தது. இந்த மூன்று நாட்களும் யாரும் கடற்கரையில் கூடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்துக்கு தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டது. இவ்வாறு கொரோனா தொற்றை காரணம் காட்டி பண்டிகைகளுக்கு பொதுமக்கள் கூடுவதற்கும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக அரசு தடை வித்தது.

ஆனால் கடந்த 27ம் தேதி கடந்த மெரினா கடற்கரையில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கும் மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன் காரணமாக  எந்த பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திந்தனர்.  குறிப்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து மூலம் ெதாண்டர்கள் சென்னைக்கு வந்து கொண்டே இருந்தனர். இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. மதுரையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தொண்டர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் எந்தவித பாதுகாப்பு விழிமுறைகளும் இன்றி பல மணி நேரம் மெரினா கடற்கரையில் சுற்றி திரிந்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தடை விதித்து விட்டு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை கூட்டி இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது கடும் கண்டத்திற்குரியது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிராமங்களில் 100 முதல் 200 பேர் மட்டும் கலந்து கொள்ளும் கிராம சபை கூட்டங்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி தடை விதித்துவிட்டு, இது போன்ற திறப்பு விழாவில் பல்லாயிரம் பேரை கூட வைத்து நிகழ்ச்சி நடத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே விதிகளை வகுக்கும் தமிழக அரசு அதை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் இல்லை என்றால் தமிழக கொரோனா பரவல் அதிகரிக்க அரசுதான் முக்கிய காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடை முற்றுகை
ஜெயலலிதாவின் நினைவகம் திறப்புக்கு வந்து குவிந்த அதிமுக தொண்டர்கள் அப்படியே டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப்பகுதியில் உள்ள  டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

காற்றில் பறந்த 144 தடை?
தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவின் படி ஒரு இடத்தில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. இந்த விதியின் படி ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கொரோனா வைரஸ்
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா கூட்டத்தை பார்த்த பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் கொரோனா கொலை செய்யப்பட்டு விட்டது என்று சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யும் விதமாக பதிவு செய்துள்ளனர். மேலும் அதிமுகவும் - கொரோனாவும் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளதாகவும், அதில் ஜெயலிலதா நினைவிட திறப்பு விழாவிற்கு வருபவர்களை எதுவும் செய்யக் கூடாது என்று எழுதி கையெழுத்து வாங்கி உள்ளதாக சிலர் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர்.


Tags : village council meeting ,opening ceremony ,Pongal ,Jayalalithaa ,government ,Corona , Restriction on village council meeting for Pongal for English New Year: Only permission for Jayalalithaa memorial opening ceremony: Has the government finished talking to Corona?
× RELATED தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் பொங்கல் கரும்பு சாகுபடி பணி