×

60 தொகுதி கேட்டு பா.ஜ பிடிவாதம் எதிரொலி : எடப்பாடி-ஜே.பி நட்டா சந்திப்பு ரத்து: அதிமுக கூட்டணியில் அதிகரிக்கும் குழப்பம்

சென்னை: அதிமுக கூட்டணியில் 60 தொகுதிகளை கேட்டு பாஜ தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதாலும், அதற்கு அதிமுக தலைமை மறுப்பதாலும், எடப்பாடியுடனான சந்திப்பை ஜே.பி.நட்டா தவிர்த்து விட்டார். இதனால் இந்த சந்திப்பு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜ, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட்டும், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளயும் (வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அல்லது உள்ஒதுக்கீடு-பாமக, தேவேந்திர குல வேளாளார்-புதிய தமிழகம்) உடனே நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் நிபந்தனை வைத்து வருகிறது.

குறிப்பாக, பாஜ 60 தொகுதிகள் கேட்டு தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது. இதற்கு அதிமுக தொடர்ந்து மறுத்து வருவதால் பாஜ தலைமை கடும் கோபத்தில் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து கடந்த மக்களவை தேர்தலில் பாஜக ேபாட்டியிட்டது. தொடர்ந்து வர உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடருமா? என்ற ேகள்வி எழுந்தது. கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமித்ஷா, பாஜகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். பாஜக சார்பில் 100 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் பட்டியலை அளித்தார். இதனை அதிமுக தரப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால் மற்ற சிறிய கட்சிகளுக்கு நாங்கள் சீட் ஒதுக்கி விடுகிறோம் என்றும் அமித்ஷா வற்புறுத்தினார். அதற்கும் அதிமுக சம்மதம் தெரிவிக்கவில்லை. 30 தொகுதிகளுக்கு மேல் ஒரு சீட்டுக்கூட வழங்கப்படாது என்பதில் அதிமுக பிடிவாதமாக இருந்தது. இதனால் அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. இரண்டாம் கட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பாஜ சார்பில் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை ஒதுக்கி தருகிறோம். எங்களுக்கு 60 சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதிலும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் பாஜக பிடிவாதமாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் நெருங்கி வருகிறது.

இதற்கு பிறகும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டை முடிக்கா விட்டால் தேர்தலை சந்திப்பதில் பிரச்னை ஏற்படும். இந்த நிலையில் பாஜவுக்கு சீட் வழங்குவது தொடர்பாக ஒரு அதிரடி முடிவை அதிமுக எடுத்துள்ளது. அதாவது பாஜகவுக்கு மட்டும் 34 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நோட்டாவுடன் தான் போட்டி போடும் அளவுக்கு தான் பாஜக வளர்ந்துள்ளது. பல இடங்களில் பாஜக என்றால் மக்களுக்கு என்ன என்றே தெரியாது. இதனால், பாஜகவை தோல்வியடைய செய்யும் வகையில் தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திமுக முன்னணியினர், முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுவதாக அறியப்பட்டுள்ள தொகுதிகள், பாஜவுக்கு வாக்கு வங்கியே இல்லாத தொகுதிகளுக்கான பட்டியலை தேர்வு செய்யும் பணியில் அதிமுக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இந்த அதிரடி திட்டத்தை பார்த்து பாஜக கதிகலங்கி போய் உள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். இரவு 10.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜ மாநில தலைவர் முருகன் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் சுற்றுச்சாலையில் உள்ள விடுதிக்கு சென்றார். தொடர்ந்து நேற்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்தார். இதையடுத்து ரிங்ரோட்டிலுள்ள அரங்கத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இரவு மதுரையில் தனியார் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கினார். இன்று தனி விமானத்தில் புதுவை செல்கிறார்.
இதற்கிடையே, மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலையில் மதுரை சென்றனர். இவர்கள் இவரும், ஜோ.பி.நட்டாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் இந்த சந்திப்பு திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கியம் காரணம் பாஜ கேட்கும் 60 தொகுதிகளுக்கு அதிமுக இன்னும் பச்சை சிக்னல் கொடுக்காததுதான். தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அதிமுக சார்பில் தலைவர்கள் அறிவித்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வர தயார் என பாஜ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நேற்று 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார். அப்போது, சீட்டுகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் பாஜவினர் தீவிரமாக எடுத்துக் கூறினர். இதனால், பாஜ ேபாட்டியிடும் தொகுதிகளின் இறுதி பட்டியலை நட்டாவிடம் கொடுத்து அவர் மூலம் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்கவும், தங்களுக்கான சீட் மற்றும் தொகுதிகளை இறுதிபடுத்திட வேண்டும் என்பதில் பாஜவினர் முனைப்பு காட்டினர்.

அதிமுக கூட்டணி தொடர்பாக கட்சியினருடன் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவை நட்டா மூலம் அதிமுக தரப்புக்கு கொடுத்து விரைவில் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க ேவண்டுமென்று தமிழக பாஜ தலைவர்கள் விரும்புகின்றனர். முக்கியமாக, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை விட பாஜவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைவர்களுக்கு பாஜ தலைவர் நிர்ப்பந்தம் விதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்தால் தான், தேர்தல் பணிகளை விரைவில் துவங்கி மேற்ெகாள்ள முடியுமென பாஜவினர் எதிர்பார்க்கின்றனர்.  இதனால், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிமுக கூட்டணியில் 60 தொகுதிகளை கேட்டு பிடிவாதம் செய்து வருகிறது பா.ஜ.
*  கடைசியாக 34 தொகுதிகளை ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
* இதை ஏற்காததால் ஜேபி நட்டாவுடன், முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு ரத்தானதாக கூறப்படுகிறது.

Tags : BJP ,meeting ,Edappadi-JP Natta ,AIADMK , Echoes of BJP's stubbornness in asking for 60 seats: Edappadi-JP Natta meeting canceled: Rising chaos in AIADMK alliance
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...