சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி இறுதி போட்டியில் இன்று தமிழகம் - பரோடா பலப்பரீட்சை

அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில், தமிழகம் - பரோடா அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில்  நடப்பு சாம்பியன் கர்நாடகா, 2வது இடம் பிடித்த தமிழ்நாடு, புதுச்சேரி, மும்பை உட்பட மொத்தம் 38 அணிகள் லீக் சுற்றில் மோதின.  இந்த சுற்றின் முடிவில் தமிழகம், இமாச்சல், கர்நாடகா, பஞ்சாப், பரோடா, அரியானா, பீகார், ராஜஸ்தான் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி கால் இறுதியில் இமாச்சல் அணியையும், அரை இறுதியில் ராஜஸ்தானையும் வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரை இறுதியில் பஞ்சாப் அணியை வென்ற பரோடா அணி, இன்று நடைபெறும் பைனலில் தமிழகத்தின் சவாலை எதிர்கொள்கிறது.

கடந்த முறை இறுதிப் போட்டியில் கர்நாடகாவிடம் ஒரு ரன்னில் தோற்று 2வது இடம் பிடித்த தமிழகம், இம்முறை கோப்பையை முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2006-07ல் நடந்த முதலாவது தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த தமிழக அணி, அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. தமிழகம் பைனலுக்கு முன்னேறிய 3 முறையும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடரில் தமிழகம், பரோடா அணிகள் கடைசியாக விளையாடிய 5 போட்டியிலும் தொடர்ச்சியாகவென்று சூப்பர் பார்மில் இருப்பதால் இன்றைய பைனலில் அனல் பறப்பது உறுதி.

தமிழகம்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர் (துணை கேப்டன்), அருண் கார்த்திக், முருகன் அஷ்வின், பாபா அபராஜி–்த், பாபா இந்திரஜித், ஜி.பெரியசாமி, மணிமாறன் சித்தார்த், என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), அஷ்வின் கிறிஸ்ட், எம்.முகமது, ஹரி நிஷாந்த், ஜெகதீசன் கவுசிக், ஷாருக்கான், ஆர்.சாய் கிஷோர், பிரதோஷ் ரஞ்சன் பால், லக்ஸ்மேஷா சூர்யபிரகாஷ், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், சந்தீப் வாரியர், சோனு யாதவ்.  பரோடா: கேதார் தேவ்தர் (கேப்டன்), அன்ஷ் படேல், பானு பனியா, சிந்தா காந்தி, பிரதீப் யாதவ், பார்கவ் பட், பார்த் கோஹ்லி, பிரத்யுஷ் குமார், சமித் படேல், லக்மன் மெரிவாலா, கார்த்திக் காக்கடே, துருவ் படேல், விஷ்ணு சோலங்கி, நினத் ரத்வா, அதித் சேத், மோகித் மோங்கியா, பபாஷபி பதான், அபிமன்யுசிங் ராஜ்புத்.

Related Stories:

>