குழந்தை மீது பைக் மோதிய விவகாரத்தில் ஒருவர் கொலை: 7 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட தகராறு  தொடர்பான கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிததுள்ளது.  கடந்த 2013ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயதான பிரதீஷ் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியுள்ளார். குழந்தையின் தந்தை கிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி ஆகியோர் வாகன ஓட்டியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் தகராறில் ஈடுபட்டனர்.   அங்கு வந்த  செந்தில் பேச்சுவார்த்தை நடத்தி மோட்டார் சைக்கிளில் வந்தவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி, கிருஷ்ணன் ஆகியோர் நள்ளிரவு 1.45 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலை எழுப்பி வெட்டி கொலை செய்துள்ளனர்.

 இதுதொடர்பாக  அந்தோணி, கிருஷ்ணன், இவர்களது உறவினர்களான ஏழுமலை, சீனி, நண்பர்களான பாலு என்ற பாலசுப்பிரமணி, அய்யப்பன், தாஸ் ஆகியோர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்னிலையில் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் டீக்ராஜ் ஆஜராகி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென வாதாடினார்.  பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளார். மேலும் 3 சட்டப்பிரிவின் கீழ் 7 பேருக்கும் தலா 3 ஆண்டு, 7 ஆண்டு, 10 ஆண்டு என தனித்தனியாக சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

Related Stories:

>