×

சம்பவ இடத்தில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு: டெல்லி குண்டுவெடிப்பு வெறும் ‘டிரைலர்’தான்: பின்னணியில் ஈரானின் சதி இருப்பதாக சந்தேகம்

புதுடெல்லி: டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு பின்னணியில் ஈரானின் சதித்திட்டம் இருப்பதாக சந்தேகப்படுகிறது. டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5.05 மணி அளவில் குறைந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டு, முழு போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு, தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சம்பவ இடத்திலிருந்து பாதி எரிந்த நிலையில் கடிதம் ஒன்றும், பிங்க் நிற ஸ்கார்ப் ஒன்றும் கிடந்துள்ளது. இஸ்ரேல் தூதரக முகவரியிட்ட அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் சரியாக தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  ஆனாலும், அந்த கடிதத்தில், ‘இது வெறும் டிரைலர்தான்’ என கூறப்பட்டுள்ளதாகவும், உயிர் தியாகம் செய்த ஈரானியர்களுக்காக பழிவாங்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிசிடிவி கேமராவில் குண்டுவெடிப்புக்கு முன் 2 நபர்கள் காரில் வந்து இறங்கியது பதிவாகியுள்ளது. அவர்களுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.ஏற்கனவே இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் பல ஆண்டாக மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் ஈரானின் அணு விஞ்ஞானியை இஸ்ரேல் சாட்டிலைட் ஆயுதம் மூலமாக  கொன்றதாக ஈரான் குற்றம்சாட்டியது. மேலும், சிரியா போர் களத்தில் பல ஈரான் கிளர்ச்சியாளர்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது. இதற்கு பழிதீர்க்க இந்த தாக்குதலை ஈரான் தீவிரவாத அமைப்புகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் விசாரணை அமைப்பு அதிகாரிகளும், நிபுணர்களும் விசாரணை நடத்த டெல்லி வந்துள்ளனர். இந்தியா, இஸ்ரேல் இடையேயான தூதரக உறவுகள் முழு நடைமுறைக்கு வந்ததன் 29ம் ஆண்டு தினத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஒத்திகை தானா?
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு வீரியம் குறைந்த அம்மோனியம் நைட்ரேட் என்ற ரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.  இதனால், குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதுவே ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு இருக்குமெனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும்.  என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

செயல்படாத சிசிடிவி
குண்டு வெடித்த இடங்களில் இந்திய தடயவியல் அதிகாரிகள், ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இஸ்ரேல் தூதரகத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, அவற்றில் பெரும்பாலானவை செயல்படாமல் டம்மியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

எதிர்பார்த்த தாக்குதல்
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மால்கா நேற்று அளித்த பேட்டியில், ‘‘உலகெங்கும் இஸ்ரேல் அமைப்புகள் அச்சுறுத்தலில்தான் உள்ளன. எனவே, இந்தத் தாக்குதல் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இது, நிச்சயமாக தீவிரவாத தாக்குதலாக இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரியும். இதனால், கடந்த சில வாரங்களாகவே அதிக எச்சரிக்கையுடன் இருந்தோம்,’’ என்றார்.

Tags : scene ,Delhi ,Iranian , Excitement over letter at the scene: Delhi blasts are just 'trailer': Suspicion of Iranian conspiracy behind
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...