×

தமிழக பொதுப்பணித்துறையில் 2 கோடிக்கு மேல் நடக்கும் பணிகள் மட்டுமே ஆய்வு: தரக்கட்டுப்பாட்டு பிரிவு கோட்ட நடவடிக்கையால் சர்ச்சை

சென்னை:2 கோடிக்கு மேல் நடக்கும் பணிகளை மட்டுமே ஆய்வு செய்ய செல்லும் தரக்கட்டுபாட்டு பிரிவு கோட்ட அதிகாரிகள் நடவடிக்கையால் பொதுப்பணித்துறையில் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில்  கட்டுமான பணி முறையாக நடைபெறுகிறதா என்பது தொடர்பாக தரக்கட்டுபாட்டு பிரிவு கோட்டம் சார்பில் அவ்வப்போது ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டம் சார்பில் கட்டுமான பணிக்கு தரச்சான்று கொடுத்தால் மட்டுமே பில் தொகை விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், தரக்கட்டுபாட்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுமான பணிகளுக்கு மட்டுமே ஆய்வுக்காக செல்கின்றனர். இதனால், பல நேரங்களில் கட்டுமான பணி தரம் குறித்தும் புகார் எழுகிறது. இந்த நிலையில், பொதுப்பணித்துறையில் ₹2 கோடிக்கு கீழ் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு ஆய்வுக்கு செல்வதில்லை என்று தெரிகிறது.

ஆய்வுக்கு செல்லாமல் கட்டுமான பணிகளுக்கு தரச்சான்று வழங்குவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சிறிய ஏரிகள், அணைக்கட்டுகள், கிணறுகள், ஆரம்பசுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. ஆனால், இந்த பணிகளை தரக்கட்டுபாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுக்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு ஒரு சில ஒப்பந்த நிறுவனங்கள் கட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்வதில்லை என்று புகார் உள்ளது. இதனால், அந்த கட்டுமானங்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே சிதிலமடைந்தும், பயனற்று போகும் நிலையில் தான் உள்ளது. இந்த நிலையில், அனைத்து பணிகளையும் தரக்கட்டுபாட்டு பிரிவு ஆய்வு செய்ய தான் மாநிலம் முழுவதும் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் தரக்கட்டுபாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருவது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu Public Works Department: Controversy , Only work worth over Rs 2 crore in Tamil Nadu Public Works Department: Study: Controversy over quality control division action
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...