பதவி வெறியால் சிதறுண்டு போக வேண்டுமா, தெளிவான முடிவு எடுங்கள் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க சசிகலா திட்டம்: அதிகாரப்பூர்வ பத்திரிகையில் வெளியான செய்தியால் பரபரப்பு

சென்னை: பதவி வெறியால் சிதறுண்டு போக வேண்டுமா, தீர்க்கமான, தெளிவான முடிவு எடுங்கள் என்று சசிகலா தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் அதிமுகவை ஒருங்கிணைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ பத்திரிகையில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா, அதிமுக பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு சசிகலா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. கட்சியுடன் சேர்த்து ஆட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்தார். ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்த சசிகலா, அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி, அவர்கள் அனைவரின் கையெழுத்தையும் பெற்று, முதல்வராக பதவி ஏற்க தன்னை அழைக்கும்படி தமிழக கவர்னரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், கவர்னர் சசிகலாவை பதவியேற்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில்தான் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுக்க சசிகலா ஏற்பாடு செய்துவிட்டு, சிறைக்கு சென்று விட்டார். ஆனால், இந்த 4 ஆண்டுகளில் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. சசிகலாவிடம் இருந்த கட்சி பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக கட்சியும் முழுமையாக வந்து விட்டது. இதையடுத்து டி.டி.வி.தினகரன், அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். தற்போது, சிறைதண்டனை முடிந்து சசிகலா வெளியே வந்துள்ளார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் பேட்டி அளிக்கும்போது, `சசிகலாவை மீண்டும் அதிமுகவில் 100 சதவீதம் சேர்க்க மாட்டோம்\” என்று கூறினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமமுக கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிகையில் நேற்று ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், சசிகலா தலைமையில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது பற்றி கூறப்பட்டுள்ளது. கட்டுரையின் விவரம்: துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும். திரைமறைவு அரசியல் நடத்துவதை சசிகலா விரும்புவதில்லை. தனியாக நின்று டெபாசிட் கூட வாங்க யோக்கிதை இல்லாத பச்சோந்தி கூட்டங்கள் எல்லாம் தொண்டர்களிடம் பசப்பு வார்த்தை பேசினாலும், மீண்டும் உங்களால் கோட்டை ஏற முடியாது. தீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்த சசிகலாவுக்கு காட்டும் விசுவாசம் இதுதானா?

கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும் என்பதை மறந்துவிட்டு, மலை உச்சியில் கொண்டு போய் அமர வைத்த சசிகலாவிடமே வாலாட்டுவதா? ஒரு தனிமனிதனுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட பதவி வெறி எனும் பேராசையால், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தையே சிதைக்க நினைக்காதே, சின்னாபின்னம் ஆக்கிட முயலாதே. கோடானுகோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் பதவி வெறியால் சிதறுண்டு போக வேண்டுமா? சுயமாக சிந்தனை செய். தீர்க்கமாக - தெளிவான முடிவினை எடு. ஆணகளை உடைத்தெறிந்து சசிகலாவை ஒரு சேர கூடி வரவேற்போம். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும் களப் பணிக்கு தயாராவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>