×

சென்னையில் தேமுதிக பொறுப்பாளர்கள் கூட்டம்: 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்க பிரேமலதா உத்தரவு

* அதிமுக, பாமக குறித்து சரமாரியாக நிர்வாகிகள் குற்றச்சாட்டு
* முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் இன்று வெளியிடுகிறார்
* கட்சி என்ன அறிவித்தாலும் அதனை அனுசரித்து தேமுதிகவினர் பணியாற்ற வேண்டும்.
* கூட்டணி என்று வந்தால் பாமக இல்லாத கூட்டணியில் இருப்போம்.

சென்னை: சென்னையில் நடைபெற்ற தேமுதிக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் அதிமுக, பாமக குறித்து சரமாரி குற்றச்சாட்டை அள்ளி வீசினர். நிர்வாகிகளின் குமுறலை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று தேமுதிக தலைமை உத்தரவிட்டுள்ளது. தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து இன்று விஜயகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.  மக்களவை தேர்தல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ேதமுதிக இடம் பெற்றது. வர உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி தொடர்ந்து எழும்பியது. அதற்கு ஏற்றாற்போல் அதிமுக, தேமுதிக தரப்பில் மோதலும் இருந்து வந்தது. அதாவது, ஜெயலலிதா இருந்த போது சட்டப்பேரவை தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கியது போல 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அதிமுகவில் கூட்டணியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி, மக்களுக்கு செல்வாக்கான கட்சி, மக்களிடம் எளிதில் அறிந்து கொள்ளும் கட்சி என்று சொன்னால் அது தேமுதிக மட்டும் தான்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் சட்டப்பேரவையில் மக்களிடம் இருந்த செல்வாக்கால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றோம். அப்படியிருக்கும் போது கூட்டணியில் எங்களுக்கு தான் முதலில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும். பேச்சு வார்த்தை தொடங்கினாலும் எங்களிடம் தான் முதலில் நடத்த வேண்டும். எங்களுடைய நிபந்தனையை ஏற்றுக்ெகாள்ளாத பட்சத்தில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். ஆனால், தேமுதிகவை ஒரு பொருட்டாகவே கருதாமல், முதலில் அதிமுக பா.ஜவுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு ெதாடர்பாக ேபச்சுவார்த்தை நடத்தியது. இதுவரை 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. அதே போல பாமகவுடனும் அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை தேமுதிகவுக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. வாக்கு வங்கி இல்லாத, நோட்டோவுடன் போட்டி போடுபவர்களுடனும், பாமகவை விட எந்த விதத்தில் நாங்கள் குறைந்தவர்கள் என்ற மனக்குமுறலும் தேமுதிகவினர் மனதில் தீயாய் பற்றி எரிந்தது.

அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை அடுத்து பதிலடி கொடுக்கும் வகையில் 234 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை தேமுதிக அறிவித்தது. தொடர்ந்து மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என்று அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சியை தேமுதிக ஏற்படுத்தி வந்தது. அதேநேரத்தில் தேமுதிகவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராகவில்லை என்ற தகவல் வெளியானது. 40 தொகுதிகள் எல்லாம் தர முடியாது. 10 தொகுதிகளை வேண்டுமானால் தருகிறோம். தேர்தல் செலவு முழுவதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மீதி என்ன செய்ய வேண்டுமோ? அனைத்தையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். வேட்பாளரை மட்டும் நீங்கள் தேர்வு செய்து அறிவியுங்கள் என்று தேமுதிக தரப்பில் கூறி விட்டதாகவும் ஒரு தகவல் ெவளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேமுதிக பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலை எவ்வாறு எதிர்க்கொள்வது. தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது, தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது. தனித்து போட்டியிட்டால் எவ்வளவு இடங்களை பிடிக்கலாம் என்பது குறித்தும், செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பொறுப்பாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். அப்போது கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தொடங்கியதில் இருந்து தேமுதிகவை அவர்கள் மதிப்பதில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்று பெயரளவுக்கு கூட மரியாதை செலுத்துவது கிடையாது. தேமுதிகவினரை பார்த்தால் யாரோ ஒருவரை பார்ப்பது போல பார்க்கின்றனர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

ஆனால் தேமுதிகவுக்கு அழைப்பு விடுப்பதில்லை. இவர்கள் தான் இப்படி என்றால் பாமவினர் தேமுதிகவுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. இது கடந்த மக்களவை தேர்தலில் இருந்து தொடர் கதையாக இருந்து வருகிறது. கூட்டணி தர்மத்தை மீறி தேமுதிக தோற்க வேண்டும் என்ற விதத்தில் பணியாற்றுகின்றனர். மக்களிடம் தேமுதிகவுக்கு என்று ஒரு வாக்கு வங்கி இன்னமும் உள்ளது. இனியும் கூட்டணி என்ற பெயரில் வெற்றி வாய்ப்பு தொகுதிகளை விட்டு, அவர்கள் வழங்கும் தொகுதியில் எவ்வளவு காலம் போட்டியிட முடியும். எனவே, நமது செல்வாக்கை கட்டும் வகையில் தனித்து போட்டியிட வேண்டும். அது வெற்றியோ, தோல்வியை நாம் தேர்தலில் தனித்து போட்டியிட்டு நமது பலத்தை மற்ற கட்சிகளுக்கு காட்ட வேண்டும். குறிப்பாக நம்மை மதிக்காதவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தங்களுடைய ஆதங்கத்தை அள்ளி வீசினர்.

தொண்டர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் பிரேமலதா பேசியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். கட்சி என்ன அறிவித்தாலும் அதனை அனுசரித்து பணியாற்ற வேண்டும். கூட்டணி என்று வந்தால் பாமக இல்லாத கூட்டணியில் நாம் இருப்போம். கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் நாளை(இன்று) வெளியிடுவார். விரைவில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா 10 கட்டளைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். அதில், மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பத்து பேர் குழு அமைக்க வேண்டும். 10 ஊராட்சிக்கு ஒரு குழு அமைக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு ஒரு குழு அமைக்க வேண்டும். வீரர்களின் வீட்டில் கட்சியினர் கொடி ஏற்ற வேண்டும். சுவர் விளம்பரம் எழுத வேண்டும்.

தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும். மண்டல மாநாடு நடத்த வேண்டும். 1ம் தேதி முதல் அந்தந்த மாவட்டத்தில் இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளில் கட்சி வேட்டி துண்டு புடவைகள் கொடுக்க வேண்டும். சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இன்று விஜயகாந்த்-பிரேமலதா விஜயகாந்த் தம்பதியரின் 31வது திருமண நாள் ஆகும். இதை மனதில் வைத்து தான் விஜயகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Tags : Temujin ,Chennai ,Premalatha ,constituencies , Temujin officials meeting in Chennai: Premalatha ordered to be ready to contest in all 234 constituencies
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...