×

விவசாயிகள் போராட்டம் மீண்டும் தீவிரமாகும் நிலையில் டெல்லி எல்லையில் இன்டர்நெட் முடக்கம்: அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், டெல்லியில் 2 நாட்களுக்கு இன்டர்நெட் தற்காலிகமாக முடக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. போராட்ட களத்திற்கு விவசாயிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லைகளான சிங்கு, காஜிபூர், திக்ரியில் பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலா போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் பலியானார். 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். செங்கோட்டையிலும் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறின.

இந்த வன்முறையை தொடர்ந்து, சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று திரும்பின. மேலும், டெல்லி-உபி எல்லையில் அமைந்துள்ள காஜிபூர் பகுதியில் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் செல்லுமாறு உபி அரசு உத்தரவிட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த விவசாய சங்கங்கள், போராட்ட களத்தில் மேலும் கூட்டத்தை சேர்த்து வருகின்றன. உபி.யிலிருந்து மேலும் பல விவசாயிகள் வந்த நிலையில், காஜிபூர் போராட்ட களத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். இதேபோல், போலீஸ் பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடக்கும் 3 எல்லையிலும் போலீசார், துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சிங்கு எல்லையில் பாதுகாப்பு படையினர் மாதிரி பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். குடியரசு தின வன்முறையில் அந்நிய சக்திகள் போராட்டத்தில் நுழைந்ததாக விவசாய சங்க பிரதிநிதிகள் அளித்த புகாரின் பேரிலேயே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், காஜிபூர் களத்தில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தை உபி அரசு துண்டித்துள்ளது. டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலையில் தேசிய நெடுஞ்சாலை 24 முழுவதும் மூடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விவசாயிகள் போராட்டத்தில் மேலும் பலர் கூடாமல் இருக்க செய்வதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், சிங்கு, காஜிபூர், திக்ரி ஆகிய 3 எல்லைப் பகுதியில் 2 நாட்களுக்கு, அதாவது 29ம் தேதி இரவு 11 மணி முதல் 31ம் தேதி இரவு 11 மணி வரை இன்டர்நெட் சேவை தற்காலிகமாக முடக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரியானா மாநில அரசு கடந்த வெள்ளிக்கிழமை மொபைல் இன்டர்நெட்டை முடக்கியது குறிப்பிடத்தக்கது. அரசின் அடுத்தடுத்த நடவடிக்கையால் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும், விவசாயிகள் தொடர்ந்து போராடுவதில் உறுதியாக உள்ளனர்.

குடும்பத்துக்கு ஒருவர் போகணும் இல்லாவிட்டால் 1500 அபராதம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் சமீபத்தில், ‘குடும்பத்திற்கு ஒருவர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டா கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர், டெல்லி போராட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு போக வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1500 அபராதம் கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைப்பார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் உண்ணாவிரதம்
மகாத்மா காந்தியின் நினைவுநாளை அனுசரிக்கும் வகையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லை போராட்ட களத்தில் விவசாய சங்க தலைவர்கள் பலர் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

செங்கோட்டையில் தடயங்கள் சேகரிப்பு
குடியரசு தின வன்முறையில் செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், விவசாய சங்க கொடி ஏற்றப்பட்டது. மேலும் செங்கோட்டையில் பல இடங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் பல்வேறு தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே, செங்கோட்டையில் தடயங்களை ஆய்வு செய்ய நேற்று தடயவியல் நிபுணர்கள் வந்தனர். அவர்கள் அங்கு தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். டெல்லி வன்முறை தொடர்பான வீடியோ உள்ளிட்ட எந்த ஆதாரங்கள் இருந்தாலும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறு டெல்லி போலீசார் மக்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.

உதவிக்கரம் நீட்டும் கிராம மக்கள்
போராட்ட களத்திலிருந்து விவசாயிகளை காலி செய்ய உத்தரப்பிரதேச அரசு மின்சாரம், குடிநீர் சப்ளையை கடந்த 2 நாளாக நிறுத்தி உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் எல்லையோர கிராம மக்கள் விவசாயிகளுக்கு உதவி வருகின்றனர். காஜியாபாத், முசாபர்நகர், கிரேட்டர் நொய்டா, மீரட் போன்ற பகுதிகளில் இருந்து தண்ணீர், மோர், தயிர் மற்றும் பரோட்டா ஆகியவற்றை கொண்டு வந்து விவசாயிகளுக்கு தருகின்றனர். பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், ‘‘ போராட்டத்தை முடித்துக் கொள்வதற்கு பதிலாக நாங்கள் உயிரையே மாய்த்துக் கொள்வோம்’’ என கூறினார்.



Tags : border ,struggle ,Delhi ,Govt , Internet blockade on Delhi border as farmers' struggle intensifies again: Govt
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது