×

வைத்திலிங்கம் எம்.பி. நடவடிக்கையால் தஞ்சையில் அதிமுக பஞ்சர் ஆகுமா? :கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்பு

தஞ்சைஅதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பதோடு,  தஞ்சை தெற்கு மாவட்டம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களின் கட்சி நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இந்நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், வேளாண் துறை அமைச்சருமான துரைக்கண்ணு திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அந்த மாவட்ட கட்டுப்பாட்டையும் தன் வசம் வைத்துக் கொண்டார் வைத்திலிங்கம். இப்படி ஏராளமான மாவட்டங்களை வைத்திலிங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் பல பகுதிகளில் அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

குறிப்பாக வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ‘‘துரைக்கண்ணு மறைந்து சில மாதங்களாகியும் இன்னும் வடக்கு மாவட்டத்திற்கு ஏன் மாவட்ட செயலாளர் நியமிக்கப்படவில்லை. வடக்கு மாவட்டத்தில் கட்சியை வழிநடத்தும் அளவிற்கு யாருக்கும் தகுதி இல்லையா?. வைத்திலிங்கத்தின் ஆணவ போக்கால் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு ஆகிய தொகுதிகளில் அதிமுக கண்டிப்பாக மண்ணை கவ்வும்’’ என சாபம் விடாத குறையாக கொந்தளிக்கின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: வைத்திலிங்கத்தின் போக்கு பிடிக்காத அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், விஜயபாஸ்கர் போன்றவர்கள் தங்கள் மாவட்டத்தில் கட்சியின் நிர்வாகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதிலும் அவ்வப்போது மூக்கை நுழைத்து வைத்திலிங்கம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.முதல்வர் எடப்பாடி கொங்கு மண்டலத்தையும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். தென் மண்டலத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுபோல் வைத்திலிங்கம் டெல்டா மாவட்டங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர காய் நகர்த்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் இல்லையெனில், அம்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவது சந்தேகம்தான்.

குறிப்பாக தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுகவில் ரத்தினசாமி, எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ராமநாதன், பாரதிமோகன், ரத்னா சேகர் உள்ளிட்ட பலர் இருக்கும்போது, மாவட்ட செயலாளர் நியமனத்தில் ஏன் தாமதம் என்று புரியவில்லை. தஞ்சை வடக்கு மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு ஆகிய தொகுதிகளில் திமுக, அமமுக, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வரும் நிலையில் அதிமுகவினர் சோர்ந்து போய் உள்ளனர். எனவே இந்த தொகுதிகளில் அதிமுக மண்ணை கவ்வும். இவ்வாறு அவர்கள் கூறினர்.எனவே, வைத்திலிங்கத்தின் நடவடிக்கையால் தஞ்சையில் அதிமுக பஞ்சர் ஆகுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : Vaithilingam ,Will AIADMK ,Tanjore ,Party , அதிமுக
× RELATED கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்காத...