×

சசிகலாவால் சிக்கிய மால் உரிமையாளர்கள் : பினாமி சட்டத்தின் கீழ் ஆக்ஷன் எடுத்தது சரியே என வருமான வரித்துறை வாதம்

சென்னை:: பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பயன்படுத்தி சசிகலா மால்களை வாங்கிய விவகாரத்தில் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரியே என வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.கடந்த 2016 நவம்பர் மாதம், 500, 1,000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கரன்சிகளை பயன்படுத்தி, சொத்துக்களை வாங்கியதாக, சசிகலா மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

இதுபோல 130 கோடி ரூபாய் மதிப்பிலான, மதிப்பிழப்பு செய்யப்பட்ட  கரன்சிகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட, சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலை, வாங்கிய விவகாரம் தொடர்பாக, மால் உரிமையாளர்கள் கங்கா பவுண்டேஷன், பாலாஜி மற்றும் வி.எஸ்.ஜே தினகரன் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர், பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர்கள்  தரப்பில் வாதிடப்பட்டது.நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்துள்ளதால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது எனவும் மால் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான  மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும், இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை,  வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரியே எனவும் வாதிட்டார்.அவரது வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதி, பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Mall Owners ,The Income Tax Department ,Sasikala , Sasikala, mall owners
× RELATED திருமாவளவன் வீட்டில் ஐடி ரெய்டு