×

மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 50 லட்சம் நிலம் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 50 லட்சம் நிலம் மீட்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்பட ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ளன. மேலும் பல்வேறு மடங்களுக்கு சொந்தமான நிலங்களும், காஞ்சிபுரத்தில் ஆங்காங்கே உள்ளன. இந்த நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்துகின்றனர். அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம், சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்துக்கு சொந்தமான சுமார் ₹50 லட்சம் மதிப்புள்ள 2722.5 சதுர அடி இடம் காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் கமலக்கண்ணன், நீண்ட நாட்களாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் உத்தரவின்பேரில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மடம் சுவாதீனப்படுத்தி கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  இந்து அறநிலையத்துறை உதவிஆணையர்கள் ஜோதி, ராமு (மேல்மலையனூர்), செயல் அலுவலர் தியாகராஜன், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று காலை அங்கு சென்றனர். பின்னர், மடத்துக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, நிலத்தைக் கைப்பற்றி மடத்தின் வசம் ஒப்படைத்தனர். இதற்கிடையில், இந்த இடம் மேற்கண்ட மடத்துக்கு சொந்தமானது. இதனை ஆக்கிரமிக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்து சென்றனர்.


Tags : Recovery ,land ,Mayilam Sivagnana Balaya Swamy Monastery , Recovery of 50 lakh land belonging to Mayilam Sivagnana Balaya Swamy Monastery
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!