அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய குகை சாமியார்: இதுவரை ரூ.230 கோடி நிதி திரண்டது

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை சேகரிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 கோடி நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார்.அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்களிடம் சுவாமி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

குகையில் வசித்து வரும் சாமியார், இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறுகையில், ``அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தன்னார்வ பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.230 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: