×

போயஸ் கார்டன் இல்ல சாவியை ஐகோர்ட் பதிவாளரிடம் ஒப்படைக்க தடை: அரசின் மேல்முறையீடு வழக்கில் தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை:  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்கிய வழக்கில் அந்த வீட்டின் சாவியை ஐகோர்ட் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தீபாவும் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக திறக்கலாம். ஆனால், வழக்கு முடியும்வரை அந்த இல்லத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது. திறப்பு விழா முடிந்த பின், வேதா நிலையத்தின் சாவியை சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானார். இவ்வழக்கில், ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி, சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதேசமயம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு தொடரும் என்றும்,  வேதா நிலையத்தை அரசே தொடர்ந்து பராமரிக்கலாம் எனவும் அறிவித்தனர்.  வழக்கு விசாரணை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Registrar ,Chief Justice ,Boise Garden House ,ICC , Boise Garden, house key, to iCourt registrar, judge, order
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...