×

பங்குச்சந்தையில் 6 நாட்களில் ரூ.11.57 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து 6வது நாளாக நேற்றும் சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ₹11.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள், பட்ஜெட் எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இறங்குமுகத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து 6வது நாளாக நேற்றும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 588 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 46,286 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு என் நிப்டி 183 புள்ளிகள் சரிந்து 13,635 ஆகவும் இருந்தது. கடந்த 6 நாட்களில் மட்டும் 3506 புள்ளிகள் சரிந்து விட்டது. நேற்று மும்பை பங்குச்சந்தையில் இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி, எச்டிஎப்சி, பவர் கிரிட், இண்டஸ் இந்த் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 150 புள்ளிகள் சரிந்து 13,818 புள்ளிகளாக இருந்தது.

 அதிகபட்சமாக டாக்டர் ரெட்டீஸ், மாருதி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் 5.69 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. பெரும்பாலான பங்குகள் சரிவை சந்தித்தன. இருப்பினும், இன்டஸ் இண்ட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி பங்குகள் ஏற்றம் கண்டன. வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், இதை முன்னிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிவிப்பு எதிர்பார்ப்புகள் காரணமாக பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்ஜெட் அறிவிப்புக்கு ஏற்ப அடுத்த வார பங்குச்சந்தைகளின் போக்கு காணப்படும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு முதலீடுகள் திடீரென வெளியேற்றப்பட்டு வருவது, சர்வதேச சந்தையில் சாதகமற்ற சூழ்நிலை, நிறுவனங்களின் காலாண்டு வருவாய் சரிவு, அமெரிக்க பொருளாதாரம் பற்றிய பெரடல் வங்கியின் கவலை போன்ற காரணங்களால் பங்குச்சந்தையில் சரிவுகள் தொடர்வதாகவும் அவர்கள் கூறினர்.  இதுபோன்ற காரணங்களால் கடந்த 6 நாட்களில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த மதிப்பு ₹1,97,70,572.57 கோடியில் இருந்து, ₹11,57,928.54 கோடி சரிந்து நேற்று ₹1,86,12,644.03 கோடியாகி விட்டது. அதாவது, கடந்த 6 நாட்கள் ஏற்பட்ட தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் சுமார் ₹11.57 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

Tags : The stock market, in 6 days, lost Rs 11.57 lakh crore
× RELATED தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது