சையத் முஷ்டாக் அலி டி20 ராஜஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது தமிழகம்: முகமது, அருண் கார்த்திக் அசத்தல்

அகமதாபாத்: முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரின் அரையிறுதியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ்நாடு, தொடர்ந்து 2வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மதியம் அகமதாபாத்தில் நடந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. சாய் கிஷோர் வீசிய முதல் ஓவரிலேயே பாரத் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.  மற்றொரு தொடக்க வீரர் ஆதித்யா அகர்வால் 29ரன் (21பந்து, 5பவுண்டரி, 1சிக்சர்) விளாசி அபராஜித் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் அசோக் மெனரியா - அர்ஜித் குப்தா இணை பொறுப்புடன் விளையாடி 3வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தது. அதிரடியாக அரை சதம் விளாசிய அசோக் 51 ரன் எடுத்து (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அர்ஜித் 45 ரன் எடுத்திருந்தபோது முருகன் அஷ்வின் வீசிய பந்தை தூக்கியடிக்க, அஷ்வின் கிறிஸ்ட் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினர்.

லோம்ரர் 3, சந்திரபால் சிங் 2, ரவி பிஷ்னாய் (0), அனிகேத் சவுத்ரி (0) ஆகியோர் முகமது பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. அந்த அணி 34 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தரப்பில் எம்.முகமது 4 ஓவரில் 24 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். சாய் கிஷோர் 2, முருகன் அஷ்வின், பாபா அபராஜித் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 155 ரன் எடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் தமிழ்நாடு களமிறங்கியது. ஹரி நிஷாந்த் 4, அபராஜித் 2 ரன்னில் வெளியேற 3.2 ஓவரில் 17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்த தமிழ்நாடு லேசான தடுமாற்றத்தை சந்தித்தது. பொறுப்பாக ஆடிக் கொண்டிருந்த நாரயணன் ஜெகதீசன் 28 ரன் (28 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தமிழ்நாடு 9.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன் என்ற நெருக்கடியான சூழலில் இருந்தது. இந்நிலையில், அருண் கார்த்திக் - கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்து பொறுப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அருண் 33 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார்.  தமிழகம் 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அருண் கார்த்திக் 89 ரன் (54 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 26 ரன்னுடன் (17 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Related Stories: