கொரோனா தடுப்பூசிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி குறித்த அச்சம் பொதுமக்களிடம் இன்னும் உள்ளது. எனவே, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். தடுப்பூசியால் பாதித்தோருக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘ இதுபோன்ற மனுக்களை ஏற்க முடியாது. மனுதாரருக்கு விருப்பம் இல்லாவிட்டால் தடுப்பூசி போடாமல் இருக்கலாம். எப்படி ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியும்’’ என்றனர். இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories:

>